திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள கொப்பம்பட்டி எனும் கிராமம். இவ்வூரின் பழைய பெயர் கொப்பமாபுரி ஆகும். இவ்வூரிலுள்ள சப்தரிஷி ஈஸ்வரர்-குங்குமவல்லி அம்மன் கோயிலில் பழமையான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலகத் தமிழாராச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது;
நாயக்க மன்னர் கால கல்வெட்டு:
திருக்கோயில் சுவடித் திட்டப் பணித் தொடர்பாக கொப்பம்பட்டி சப்தரிஷி ஈஸ்வரர் கோயிலில் பழமையான சுவடிகள் இருப்பு குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கோயிலில் "கொப்பமாபுரித் திருவூடல்" எனும் பழைய இலக்கிய ஓலைச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பதிப்பிக்கப்படாத இந்த ஓலைச்சுவடியை நூலாக்கும் பணி தற்பொழுது எனது மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நூலாக்கப் பணியின் பொருட்டு கோயில் வரலாறு திரட்டுதல் தொடர்பாக மீண்டும் கள ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது கோயிலில் இருந்த பழமையான கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. கல்வெட்டு கோயில் கருவறையின் வெளிப்புறத்தில் வலது பக்கம் சுவரின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. அது போல அதேக் கல்வெட்டுச் செய்தி கோயிலின் நுழைவு வாயிலின் தெற்கு பகுதியிலும், தளிகை ஆற்றின் கிழக்குப் பகுதியிலும் தனிக் கல்லில் வெட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டை துறையூர் பாளையத்தின் ஜமீன்தார் நல்லப்ப ரெட்டியார் அவர்கள் கி.பி.1718 ஆம் ஆண்டு வெட்டி வைத்துள்ளார்.
ஜமீன்தார் நல்லப்ப ரெட்டியார் வரலாறு:
கி.பி.1592- ஆம் ஆண்டு விஜயநகர பேரரசின் மதுரை பகுதிக்கு ஆளுநராக விஸ்வநாத நாயக்கர் நியமிக்கப்பட்டார். இவர் அரிய நாத முதலியாரின் உதவியுடன் பாளையக்காரர் முறையை அறிமுகம் செய்தார். தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்தார். பிற்காலத்தில் கி.பி. 1801 ஆம் ஆண்டு பாளையப்பட்டு முறை ஜமீன்தாரி முறையாக மாற்றப்பட்டது.
விஜயநகர சாம்ராஜ்யத்தின் பகுதியான "மனுகுண்டி " நகரிலிருந்து வந்த வேம ரெட்டி வம்சத்து பரம்பரையினர் துறையூர் பகுதியை ஜமீன்தார்களாக இருந்து ஆட்சி செய்து வந்துள்ளனர்.இவர்கள் 'விஜய வெங்கிடா சலபதி' எனப்பட்டம் சூட்டிக் கொண்டு துறையூரை 18 பரம்பரைக்கும் மேலாக ஆண்டு வந்துள்ளமையினை அறிய முடிகிறது. மேலும் கி. பி. 17 ஆம் நூற்றாண்டில் துறையூர் பாளையக்காரரான வல்லக்கோல் எர்ரம ரெட்டியாரின் மகன் நல்லப்ப ரெட்டியார் பாழடைந்து கிடந்த சப்தரிஷி ஈஸ்வரர் திருக்கோயிலைப் புதுப் பித்து மறுபடியும் கட்டியுள்ளார். மேலும் சில கோயில்களை அவர் கட்டியதாகவும் வரலாறு வழி அறிய முடிகிறது.
கல்வெட்டு தரும் நிலதானச் செய்தி:
கி.பி.1718 - ஆம் ஆண்டு வைகாசி மாதம் 13 ஆம் தியதியில் ஸ்ரீ வீர வேங்கட தேவ மகாராயர் கனகிரி நகரத்தை ஆண்டு வந்தார். அப்பொழுது திருச்சிராப்பள்ளியின் வடக்கில் அமைந்த துறையூர் சீமையில் மூலைபத்து கொப்பமா புரி சப்தரிஷி ஈஸ்வரர் - குங்கும வல்லியம்மன் திருக்கோயில் சுவாமி பூசைக்குரிய நெய்வேத்தியத்திற்கு துறையூர் பாளையக்காரர் நிலதானம் வழங்கியுள்ளார். இந்த நில தானம் வழங்கியவரின் மூதாதையரான வல்லக்கோல் நல்லப்ப ரெட்டியார் (தாத்தா) பெயர் முதலில் சுட்டப்பட்டுள்ளது. அதன் பின் ந.ஏர்ரம ரெட்டியார் மகன் நல்லப்ப .ரெட்டியார் அவர்கள் திருக்கோயிலுக்கு நெய்வேத்தியம் பண்ண பூமிதானம் செய்தார் என்று சுட்டப்பட்டுள்ளது.
பூமி தானம் பற்றிய விவரம் வருமாறு:
காரப்புடையாம்பட்டி எல்லைக்கு வடக்கு ; தளிகை ஆற்றுக்கு கிழக்கு, நாகய நெல்லூர் தலைக்கு தெற்கு; தம்மம்பட்டி வகைக்கு மேற்கு. இந்த எல்லைக்கு உள்பட்ட மரங்கள், கால்நடை அடைக்கும் பட்டி, தென்னந்தோப்பு, புளியந்தோப்பு , கிராமத்தின் வரி வருவாய் ஆகியவை மேற்படி கோயிலுக்கு உரியவை ஆகும். மேலும் காரப் புடையாம்பட்டியில் உள்ள ஆறும், தென்னந் தோப்புக்குக் கிழக்கில் உள்ள நஞ்சையில் 6 செய் நிலமும் (10.5 ஏக்கர் நிலம்) கோயிலுக்குப் பூமி தானமாக ஜமீன்தார் நல்லப்ப ரெட்டியார் வழங்கியுள்ளார் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் சு. தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.