திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள நேமூர் என்ற இடத்தில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மூர்த்தி ஆகியோருடன் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது திருமாவளவன் பேசுகையில், 'திக்கற்ற காட்டில் விட்டதைப் போல் அரசியல் களத்தில், தேர்தல் களத்தில் நாம் நின்று கொண்டிருந்த பொழுது நமக்கு கை கொடுத்து தூக்கி நிறுத்தியவர் கலைஞர். அதிமுக அப்பொழுது நம்மை கண்டு கொள்ளவில்லை. ஒப்பந்தம் முறிந்து போனது. சந்திப்பதற்கு கூட ஜெயலலிதா அம்மையார் உடன்படவில்லை. நானும் ரவிக்குமாரும் போயஸ் தோட்டத்திற்கு போய் மணிக்கணக்கில் காத்துக் கிடந்து விரக்தியில் வெளியேறிய நிலையில் அந்த தகவலை அறிந்த கலைஞர் தொலைப்பேசியில் என்னை அழைத்து அரவணைத்துக் கொண்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 8 சதவீத ஓட்டு வாங்கி காட்டிய பிறகுதான் அதிமுக கூட்டணியில் சேர முடிந்தது. விடுதலை சிறுத்தைகள் அப்படி தனித்துப் போட்டியிடவில்லை; எத்தனை சதவீதம் வாக்கு வங்கி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவில்லை; தமிழ்நாடு முழுக்க நாம் வேட்பாளர்களை நிறுத்தவில்லை ஆனாலும் கலைஞர் 2009-இல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளை கொடுத்தார். இரண்டு நாடாளுமன்றத் தொகுதி என்பது 12 தொகுதிகள். இதெல்லாம் சாதாரணமான ஒரு முடிவல்ல. இதெல்லாம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் கிடைக்கும் வாய்ப்பு கிடையாது. எல்லோரும் தனது சொந்தக் காலில் நின்று குட்டிக்கரணம் போட்டு சாதித்து காட்டிய பிறகுதான் இந்த 20, 30 ஆண்டுகளில் கூட்டணியிலேயே சேர முடிந்தது. அது மட்டுமில்லாமல் நாங்கள் தனிச் சின்னத்தில் நின்று அங்கீகாரம் பெற விரும்புகிறோம் என்று சொன்னபோது அதற்கும் வாழ்த்து சொன்னவர் கலைஞர்'' என்றார்.