தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் தெருத்தெருவாக சென்று தங்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் சிலர் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. சில வேட்பாளர்கள் டீ கடையில் வாக்கு சேகரிக்கும் போது டீ போடுவது, சலவை கடை இருந்தால் துணிகளை சலவை செய்வது, ரோட்டை கூட்டுவது என விதவிதமான முறைகளில் வாக்கு சேகரித்து வருகிறார்கள். குறிப்பாக நாகையில் வேட்பாளர் ஒருவர் உணவு விடுதி ஒன்றில் புரோட்டா போட்டு கொடுத்து புரோட்டா மாஸ்டரையே அசரவைத்த சம்பவமும் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட திருவொற்றியூர் 2 வார்டு பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக போட்டியிடுபவர் நித்யா. அவரின் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவரின் பிரச்சாரத்துக்கு உதவியாக அவரின் எட்டு வயது மகளும் உடன் வருகிறார். வாக்காளர்களுக்கு தன் கைகளால் நோட்டீஸ் வழங்கும் அந்த சிறுமி, ”எங்க மம்மிக்கு சப்போர்ட் பண்ணுங்க” என்று குழந்தை முகம் மாறாது வாக்குகேட்டு செல்கிறார். வேட்பாளரை பார்த்ததும் பரபரப்பாக வரும் வாக்களார்கள் இந்த சிறுமியின் முகத்தைக் கண்டதும் சிரித்தவாறே நோட்டீஸை பெற்றுக்கொண்டு வாக்களிப்பதாக உறுதி அளிக்கிறார்கள். தற்போது அந்த சிறுமி வாக்கு கேட்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.