Skip to main content

ஹைட்ரோ கார்பன்அனுமதி கூடாது - மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018


தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. அதுவும், பல பேரை துப்பாக்கி சூட்டிற்கு இரையாக்கிய வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்திக்கின்றது மத்திய பாஜக அரசு. விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் வெகுவாக பாதிக்கும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையிலிருந்து.,

"காவிரி டெல்டா பகுதிகளில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு அதனைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஹைட்ரோகார்பன் எடுக்கும் 55 மண்டலங்களில் 3 மண்டலங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை முதல் மண்டலம், பரங்கிப்பேட்டை முதல் வேளாங்கண்ணி வரை இரண்டாவது மண்டலம், குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை மூன்றாவது மண்டலமும் அமைக்கப்படவுள்ளன. இந்த மூன்று மண்டலங்களில் இரண்டு மண்டலங்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு மண்டலம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, மக்கள் ஏகோபித்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” கூறிய மத்திய அரசு தற்போது திடீரென்று மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கியிருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலையாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை நடத்திப் பல பேருக்குப் புற்றுநோயை கொடுத்து, பல பேரை துப்பாக்கி சூட்டிற்கு இரையாக்கிய வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்திருப்பது என்பது மத்திய பாஜக அரசிற்குத் தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் சிறுதுளி அளவும் அக்கறை இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் வெகுவாக பாதிக்கும் இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், தமிழகத்தில் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறது அந்த அறிக்கை.
 

சார்ந்த செய்திகள்