முதல்வர் எடப்பாடி கொடநாட்டில் கொள்ளை மற்றும் கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டியிருக்கும் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் இன்று விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது,
’’கொடநாடு கொள்ளை மற்றும் அதன்பின் நடந்த கொலைகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுப்பது தொடர்பாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், சென்னையில் வழக்கறிஞர்களை சந்திக்க வந்துள்ளேன். சயான், மனோஜ் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. என் மீதும் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
தமிழக அரசு மீது நான் குற்றம் சாட்டவில்லை. எடப்பாடி பழனிசாமி மீதுதான் குற்றம் சாட்டுகிறேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. கொடநாடு விவகாரத்தில் செய்தியாளராக நான் எனது பணியை முழுமையாக செய்தேன். இந்த குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.
கொடநாடு கொள்ளை, அதன்பின் கொலைகள் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை சொல்வது எடப்பாடி பழனிசாமியின் கடமை. கொடநாடு தொடர்பான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி உள்ளார். ஆனால் என்னிடம் மேலும் ஆதாரங்கள் உள்ளன. அதை சரியான நேரத்தில் வெளியிடுவேன். இவ்விவகாரத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்’’என்று தெரிவித்தார்.