கரோனா வைரஸ் பீதி ஒருபுறம் தொடர்ந்து கொண்டே இருக்க, ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனால் இயற்கை மட்டும் அதன் செயல்பாட்டை நிறுத்தவில்லை. நேற்று தமிழகம் முழுக்க பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
அப்படித்தான், ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளின் சில இடங்களில் கனமழை பெய்தது. கடம்பூர் மலையிலுள்ள மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை, கம்பனூர், குன்றி ஆகிய மலைப்பகுதிகளில் கனமழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் மலையிலிருந்து கீழ் பகுதியை நோக்கி ஓடிவந்தது அப்படி வந்த நீர் தூக்கநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் அமைந்துள்ள குண்டேரிபள்ளம் அணையை நோக்கி வந்தது. இந்த அணையில் சில அடி நீர்தான் முன்பு இருந்தது. ஆனால் ஒருநாள் ஒரு நாள் மழையில் வந்த நீர் அந்த அணையின் 42 அடி முழு கொள்ளளவையும் நிரப்பி, உபரி நீராக வெளியேற தொடங்கியது.
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரி நீராக 500 கன அடி நீர் நேற்று இரவிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் அந்த அணை பகுதியில் உள்ள கிராமங்களான கொங்கார்பாளையம், வாணிபுதூர், கள்ளியங்காடு, வினோபா நகர், தோப்பூர் உள்ளிட்ட பத்து கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், கால்நடைகளை ஆற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்றும், மீன் பிடிக்கவும் ஆற்றில் இறங்க கூடாது என்றும் தடை விதித்து உள்ளார்கள்.
இந்த குண்டேரிபள்ளம் அணையில் அவ்வப்போது நீர் நிரம்பி வெளியேறி, அது பவானி ஆற்றில் வீணாக கலக்கிறது. இங்கு கடந்த பத்து வருடங்களாகவே மூன்று தடுப்பணைகள் கட்டி அதன் மூலம் நீரை சேமித்து வைத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்களில் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படும் என விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த தடுப்பணைகள் கட்டப்படவேயில்லை அதனால் இப்போதும் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் மொத்தமும் வீணாக பவானி ஆற்றில் கலக்கிறது.