'நிவர்' மற்றும் 'புரெவி' புயல், அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட மழையால் உருவான சேதங்களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான மத்தியக் குழு கடந்த வாரம் சனிக்கிழமை தமிழகம் வந்தது.
அதைத் தொடர்ந்து இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) காலை ஆய்வை தொடங்கிய மத்தியக் குழு சென்னை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்தது.
ஆய்வுப் பணியை நேற்று மாலை நிறைவு செய்த நிலையில் மத்தியக் குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு சென்னையிலிருந்து டெல்லிக்குத் திரும்பும் மத்தியக் குழு, சேத விவரங்களைக் கணக்கீடு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதைத் தொடர்ந்து மத்திய அரசு, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.