Skip to main content

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வருந்தத்தக்கது! ஏமாற்றமளிக்கக் கூடியதே! - கி.வீரமணி

Published on 16/02/2018 | Edited on 16/02/2018
veeramani


காவிரி நீர்ப் பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு - ஏமாற்றமளிக்கக் கூடியதாகும். தமிழ்நாட்டின்  உரிமையை மீட்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எந்த நதியும், எந்த மாநிலத்திற்கும் தனியாக சொந்தமானவை அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறிய கருத்து சரியானது; கருநாடகம் ஏதோ காவிரி தங்களுக்கே உரியது என்று உரிமை கொண்டாடுவது சரியான நிலைப்பாடு அல்ல என்பதை உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்றே இதனை புரிந்துகொள்ளுதல் அவசியம். 

நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்கவேண்டாமா?

முன்பு நடுவர் மன்றம் தந்த இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு 192 டி.எம்.சி. வழங்க ஆணையிட்டதை மாற்றி, 177.25 டி.எம்.சி. நீராகக் குறைத்திருப்பது வருந்தத்தக்கதும், ஏமாற்றமளிக்கக் கூடியதாகும்.

ஏற்கெனவே, காவிரி டெல்டா பகுதியில் சம்பா, குறுவை போன்ற பயிர்ச் சாகுபடிகள் சரிவர நடக்காமல் பாலைவனமாக அப்பகுதி மாறிடும் நிலையில், தவித்த வாய்க்குத் தாகம் தீர்க்கக்கூடிய அளவில்கூட தண்ணீர் தராதது மிகவும் ஏமாற்றம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஆனாலும், இப்பொழுது உச்சநீதிமன்றம் அளித்த இந்த அளவு நீரையாவது அளிக்கப்பட உறுதி செய்யப்படவேண்டும்.

உச்சநீதிமன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியம் என்னாயிற்று?  ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீர்ப் பங்கீடு சம்பந்தமாக காவிரி  நதி நீர் மேலாண்மை வாரியம், அதிகாரிகள் மேற்பார்வை குழு - இவை இரண்டையும் அமைக்காமல் மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நடந்துவருவது தமிழ்நாட்டு விவசாயிகளுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும்.

இதற்கு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களே அடிப்படையாக உள்ளன. எனவே, உடனடியாக தங்கள் போக்கை மாற்றிட மத்திய அரசு முன்வந்து, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டியது அவசியம் - அவசரம்!

தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் உள்ள அரசு இதனை வலியுறுத்தி உரிமைகளை நிலைநாட்டிட உறுதியான முயற்சிகளை இந்தக் காலகட்டத்தில் செய்யவேண்டும்.

ஆளுங்கட்சி, உடனடியாக அனைத்துக் கட்சிகள், சமூக, விவசாய அமைப்பினரைக் கூட்டி, ஒன்றுபட்ட ஒருமித்த குரலில் நமது நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றிட அனைத்து முயற்சிகளையும் செய்யவேண்டும்!

நீட் தேர்வினை - உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று காட்டிய அவசரத்தை, இந்த விவசாயம் சம்பந்தப்பட்ட முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினையில், நீர்ப் பங்கீட்டில் காட்ட முன்வரவேண்டும் மத்திய அரசு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்