தமிழகத்தில் கொலைகார கும்பலின் ஆட்சி நடப்பதாக ஓமலூர் அருகே நடந்த ஊராட்சிசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள பாகல்பட்டியில் திமுக சார்பில் ஊராட்சிசபைக் கூட்டம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், பாகல்பட்டி சுற்றுவட்டாரத்தில் நிலவும் அடிப்படை பிரச்னைகள் குறித்து பெண்களிடம் கேட்டறிந்தார். ஜெயசித்ரா, ஜெயா, கலைவாணி, ஆயாபொண்ணு, சாந்தி, கலையரசி, பிரதீபா உள்பட 25 பெண்கள் முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பு, சாக்கடை கால்வாய் வசதி, போக்குவரத்து வசதி, கல்விக்கடன் ரத்து, பால் கொள்முதல், மருத்துவ உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியது: ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி பல திட்டங்களை நிறைவேற்றி கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.
இதேபோல் 7 ஆயிரம் கோடி விவசாய கடன்களை பதவியேற்ற மேடையிலேயே ரத்து செய்தார். நெசவாளர் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். ஆனால் இந்த ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை.
நான் 1989ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது பல மணிநேரம் நின்று மகளிருக்கு சுழல்நிதி, வங்கிக்கடன் ஆகியவற்றை வழங்கினேன். ஆனால் தற்போது சுய உதவிக்குழுக்கள் அநாதையாக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தின் ஆட்சி ஐசியூவில் கோமா நிலையில் உள்ளது. கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் ஆகியவைதான் இந்த ஆட்சிக்கு முக்கியமானதாக உள்ளது. இந்தியாவிலேயே கொலைகார ஆட்சி என்றால் முதலிடம் இந்த ஆட்சிக்குதான் கிடைக்கும்.
ஜெயலலிதா வாழ்ந்த கொடநாட்டிலேயே ஐந்து கொலைகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கிருந்த ஆவணங்கள், பணம் ஆகியவற்றை எடுக்க இந்த கொலைகள் நடந்துள்ளன. வெளியே தெரிந்து விடும் என பயந்து கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த சயான், குடும்பத்தினரை திட்டமிட்டு கொன்றுள்ளனர். இதை தெகல்கா ஆசிரியர் வெளிக்கொண்டு வந்தார்.
இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க நீதிமன்றத்தை முதல்வர் நாடினார். ஆனால் முறையாக விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு கொலைகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கொள்ளையடிப்பதில் எடப்பாடியையே முந்திவிட்டார் அமைச்சர் வேலுமணி. இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கியுள்ளார். இவர் மீது விசாரணை நடத்திய டிஜிபியும், இந்த வழக்கில் சிக்கியுள்ளார். கிரிமினல் கேபினட், கொள்ளை கேபினட், கொலைகார கேபினட் செய்யும் ஆட்சியை அகற்றுவதுடன் அதற்கு துணை நிற்கும் மோடியையும் ஓட ஓட விரட்ட, வரும் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை நானே அதிகாரிகளிடம் கொடுப்பேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.