Skip to main content

நெருஞ்சிக்குடி உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியை மேற்கொண்ட வீரசோழன் அணுக்கன் படை

Published on 15/04/2018 | Edited on 15/04/2018
kovil1

 

சோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட நெருஞ்சிக்குடி உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவிலில் உழவாரப்பணியை மேற்கொண்ட வீரசோழன் அணுக்கன் படை குழுவினர் – புதுக்கோட்டை மாவட்டத்தில் பாழடைந்த கோவிலை மீட்டனர். 

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் நெருஞ்சிக்குடியில் உதய மார்த்தாண்ட ஈஸ்வரர் கோவில் உள்ளது. சோழ, பாண்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்ட இக்கோவிலில் அவ்வப்போது வழிபாடு நடைபெற்று  வந்தாலும், முழுமையான பராமரிப்பின்றி கோவிலின் கருவறை கோபுரம், மண்டபம்  உள்ளிட்ட பகுதிகளில் விழுதுகளுடன் கூடிய ஆலமரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ந்திருந்ததோடு, கோவிலின் சுற்றுச்சுவர் உள்ளிட்டவை முழுமையாக புதர் மண்டிக்காணப்பட்டது. 

 

இந்நிலையில் திருச்சி பார்த்தி, முருகன், எடிசன் உள்ளிட்டோர் இக்கோவிலின் நிலை குறித்து கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழுமத்தின் தலைவரும் , வீர சோழன் அணுக்கன் படையின் அமைப்பாளருமான பொறியாளர் கோமகன் தலைமையிலான குழுவினருக்கு தகவல் பகிரப்பட்டது. இதனைத்தொடர்ந்து குழுவின் ஆலோசகர்கள்  சசிதரன், மாணிக் ராஜேந்திரன் , ரமேஷ் முத்தையன், வேல்முருகன் , சேவாஸ் பாண்டியன், பிரவீன்  உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முப்பதுக்கும்  மேற்பட்ட தன்னார்வலர்கள் சித்திரை 1 ஆம் நாள் தமிழ் வருடபிறப்பு தொடங்கி இரண்டு நாட்கள் உழவாரப்பணியை மேற்கொண்டனர். இதில் உள்ளூர் இளைஞர்களும், ஊர் பிரமுகர்களும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

 

இக்கோவிலின் வரலாற்றுப் பின்னணியை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் கரு.ராஜேந்திரன் கூறியதாவது :  ‘’நான்கு தலைமுறை சோழ மன்னர்களின் கல்வெட்டு கொண்ட கோவில்  இக்கோவிலில் முதலாம் ஆதித்தன் , ராஜேந்திரன் , இரண்டாம் ராஜராஜன் , குலோத்துங்கன் உள்ளிட்ட நான்கு முக்கிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இருப்பது சிறப்பாகும். மேலும் பாண்டிய மன்னரான சுந்தரபண்டியனின் கல்வெட்டும் தனிக்கல்லில் காணப்படுகிறது. இத்துடன் இக்கோவிலின் புறப்பரப்பில் சுண்ணாம்பு பூச்சு இருந்து சிதைந்துள்ளதோடு சிதைந்த ஓவியங்களும் காணமுடிகிறது, இதன் மூலம் இக்கோவில் பிற்காலத்திலும் பயன்பாட்டில் இருந்துள்ளதை அறியமுடிகிறது, எனினும் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்கிறார்.

 

உழவாரப்பணி குறித்து புதுக்கோட்டை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,  இக்கோவிலில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் , சிவனாரின் நேர்த்தியான வடிவங்களை புறசுவரிலும், முருகன் வள்ளி தெய்வானை குடும்ப சகிதமாய் பிற்கால சோழர் கலைபாணியிலான சிற்பங்களும், பிள்ளையார், அம்பாள் , மூலவர், நந்தி  ஆகிய சிற்பங்கள் வழிபாட்டிலும் உள்ளது.

 

 தாவரங்களால் மிக அதிகமாக சிதைந்த நிலையில் இருந்த  இக்கோவிலை, கோவிலின் கட்டுமானத்திற்கு எந்த சிதைவும் ஏற்படாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்  உழவாரப்பணியை மேற்கொண்டுள்ளதோடு கட்டுமானத்தை சிதைத்து வந்த மரங்களை வெட்டி நீக்கியுள்ளனர். மேலும் இது வளராமல் இருக்கும் வகையில்  களைக்கொல்லி உள்ளிட்ட வேதிப்பொருட்களை  தெளித்துள்ளனர், இதனால் கட்டுமானங்கள் மேலும் சிதைபடாமல் காக்கப்பட்டுள்ளது மகிழ்வை தருகிறது மேலும்  இதனை உள்ளூர் மக்கள் முறையாக பராமரிக்க முன் வருவதே நிரந்தர தீர்வாகவும்  இந்த வரலாற்று சின்னத்தை இன்னும் பல நூறாண்டுகள் காக்கவல்ல முன்னெடுப்பாகவும்  இருக்கும் என்றார். 

முன்னதாக உழவாரப்பணி நடைபெறும் தகவல் அறிந்து வீர சோழன் அணுக்கன் படை தன்னார்வக்குழுவினரை நேரில் சென்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன் தலைமையில், கஸ்தூரி ரெங்கன் ,மா.மு. கண்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.’’

சார்ந்த செய்திகள்