![Curfew with restrictions ... Tamil Nadu government announcement!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Pyg6fufqEL4E8gYeD9PxGHy_1R9DJol3oRPtZgJmEag/1619268755/sites/default/files/inline-images/dfygreytrey_1.jpg)
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியபோதும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதியக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று (24/04/2021) வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வர இருக்கிறது.
அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. சென்னை மாநகராட்சி உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம். ஓட்டல், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தால் இ-பதிவு காட்டவேண்டும். வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை. தனியார், அரசுப் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை. இறுதி ஊர்வலங்களில் 25 பேரும், திருமண நிகழ்ச்சியில் 50 பேரும் மட்டும் கலந்துகொள்ள அனுமதி. கோவில் குடமுழுக்கில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 50 சதவிகிதம் ஐ.டி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.
இந்தப் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 26 அதிகாலை 4 மணியிலிருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.