கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஊத்தாங்கல் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வள்ளி தெய்வானை உடனுறை தணிகைவேல் முருகன் ஆலயம் மற்றும் 47 அடி உயரம் கொண்ட ஊத்தாங்கல் முருகன் சிலைக்கு குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி கோவில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. 13 ஆம் தேதி வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. 14 ஆம் தேதி மங்கல இசையுடன் இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று 15 ஆம் தேதி புதன்கிழமை நான்காம் கால யாக பூஜைகள், 5 ஆம் கால யாக பூஜைகளும், விக்னேஸ்வர பூஜை, 6 கால யாக பூஜை, மூல மந்திர ஹோமம் நடைபெற்றது.
இன்று காலையில் தத்வார்ச்சனை, நாமகர்ணம், 6 ஆம் கால மகா பூர்ணாஹூதி, மற்றும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாத்ராதானம் நடைபெற்று கடம் புறப்பாடு புறப்பட்டு, சரியாக காலை 10 மணிக்கு 47 அடி திருவுருவ சிலைக்கு குடமுழுக்கு, காலை 10:20 மணிக்கு மூலஸ்தான ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை தணிகை வேல் முருகனுக்கு குடமுழுக்கு மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மங்கல வாத்தியங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன், 47 அடி உயரம் கொண்ட ஊத்தங்கால் முருகன் திருச்சிலைக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா அரோகரா” "கந்தா போற்றி முருகா போற்றி" என முழக்கம் எழுப்பினர். பின்னர் பக்தர்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.