![cuddalore district, neyveli nlc truck incident police investigation village peoples](http://image.nakkheeran.in/cdn/farfuture/BcasKRMGO_SaJUC-dKQYsIpu85aeeY6rIwvLsNImCjE/1628700956/sites/default/files/inline-images/fi4333.jpg)
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட்டு, நிலக்கரி வெட்டப்படுகிறது. அதன் மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மின் உற்பத்திக்கு பிறகு நிலக்கரி முற்றிலுமாக எரிந்து சாம்பலான பின்பு, என்.எல்.சி. நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தில் சாம்பல் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அச்சாம்பலை, தார் சாலை அமைப்பதற்கும், சிமெண்ட் தயாரிப்பதற்கும், தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் லாரிகள் அதிவேகமாகச் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் என்.எல்.சி நிறுவனத்தின், இரண்டாவது அனல் மின் நிலையத்தின் வழியாக இன்று (11/08/2021) சாம்பல் ஏற்றி வந்த லாரி ஒன்று கோவிலுக்குச் சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மற்றும் அவரது மனைவி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஆபத்தான நிலையில் என்.எல்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
![cuddalore district, neyveli nlc truck incident police investigation village peoples](http://image.nakkheeran.in/cdn/farfuture/a7a85ap6WCXNTJAMZMLGX0kYjUExs9rygs40ieO7Nag/1628700985/sites/default/files/inline-images/f2_8.jpg)
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த மேலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தனின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவ்வழியாகச் சென்ற சாம்பல் லாரிகளை அடித்து நொறுக்கியதுடன், மூன்று லாரிகளை தீ வைத்துக் கொளுத்தினர். மேலும், அவ்வழியாகச் சென்ற 10-க்கு மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் லாரி ஓட்டுநர்கள் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த நெய்வேலி காவல்துறையினர் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த கோவிந்தனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, விபத்தில் சிக்கி இறந்து போன கோவிந்தனின் குடும்பத்திற்கு நிரந்தர வேலை மற்றும் நிவாரண தொகை வழங்க வேண்டும் என வற்புறுத்தியதால், இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியை பெரும் போர்க்களம் போலக் காட்சியளித்தது.
கொழுந்துவிட்டு எரிந்த லாரிகளின் புகை மூட்டத்தால் அப்பகுதியே கரும்பு புகையுடன் காட்சி அளித்தது. லாரிகள் உடைக்கப்பட்டதுடன், தீ வைத்து எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.