கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (01/07/2020) முற்பகல் என்.எல்.சி நிறுவன இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5-ஆவது அலகில் உள்ள பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், பெரும் புகைமூட்டமாக அப்பகுதி காட்சியளித்தது. அதனை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் 3 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில் கல்லமேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், நெய்வேலி டவுன்ஷிப்பை சேர்ந்த நாகராஜ், கொல்லிருப்பு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், மேலகுப்பத்தைச் சேர்ந்த பத்மநாபன், பெரியகாப்பான்குளத்தை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் ராமநாதன் உள்பட 7 பேரும் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
மேலும் அப்பகுதியில் பணிபுரிந்த 17 பேர் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில் இறந்த தொழிலாளர்களின் உடலை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல என்.எல்.சி. அதிகாரிகள் முற்பட்டபோது இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சுற்றுப்பகுதியை சேரந்த சுமார் 500- க்கும் மேற்பட்டோர் என்.எல்.சி. வாயில் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் சமரசம் செய்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சடலங்கள் கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சஹாமுரி, விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன் குமார், விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பா.ம.க மாநில பொதுச்செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், த.அசோக்குமார், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டனர்.
பின்னர் விபத்து குறித்து என்.எல்.சி. உயரதிகாரிகளுடன் கேட்டறிந்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தற்போது வெடி விபத்து நடைபெற்ற பாய்லர் அருகேயுள்ள 6 வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தள்ளனர். அதேபோல் தற்போது மீண்டும் 5 வது யூனிட்டில் பாய்லர் வெடித்து 7 தொழிலாளர்கள் உயரிழந்தும், 17 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக விபத்து நடந்து வரும் 4,5,6 ஆகிய யூனிட்டில் செயல்படும் பாய்லர்களை மூட வேண்டும், இறந்து போன தொழிலாளர்களுக்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும், இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், தொடர்ச்சியாக விபத்து நடந்து வரும் பகுதிகளை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதற்கட்ட பேச்சுவார்த்தையில் என்.எல்.சி அதிகாரிகளுடன் முன் வைத்தனர்.
"இனிவரும் காலங்களில் இதுபோல் சம்பவங்கள் நடைபெறாது என்றும், உயர் ரகமான இயந்திரங்களை கொண்டு இயக்கப்படும் என்றும் என்.எல்.சி நிறுவன தலைவர் ராகேஷ்குமார் உத்தரவாதம் அளித்துள்ளார்" என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் மேற்பார்வையில் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலைய முதன்மை பொதுமேலாளர் கோதண்டம், பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால், அவரை என்.எல்.சி. நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதத்திற்குள் இரண்டு முறை பாய்லர் வெடித்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.