திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் அரசு மருத்துவமனை எதிரில் சக்கிலியன்குளக்கரையில் சுகாதார வளாகம் (கழிப்பறை) உள்ளது. தூய்மை இந்தியா திட்டம் 2018-19 நிதியில் சுமார் 16.50இலட்சம் செலவில் கழிப்பறை புதுப்பிக்கப்பட்டும் இதுநாள்வரை திறக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதியில் உள்ள காலனி மக்கள் ஆத்தூர் செல்லும் சாலையையும், மார்க்கெட் சாலையையும் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கழிப்பறை திறக்க கோரி மனுக் கொடுத்தும் இதுநாள் வரை கழிப்பறையை திறக்கவில்லை. இதனால் அரசுப்பணம் 16.50இலட்சம் வீணாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் கழிப்பறை பூட்டிக் கிடப்பதால் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுசம்மந்தமாக 8வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமி கூறுகையில்... எங்களுக்கு கழிப்பறை கட்டித் தருகிறோம் எனக்கூறி மனு வாங்கிச் சென்றவர்கள் மூன்று வருடங்களாகியும் கழிப்பறை கட்டிக் கொடுக்கவில்லை. நாங்கள் மார்க்கெட் தெருவில் உள்ள சுகாதார வளாகத்தை கழிப்பறையாக பயன்படுத்தி வந்தோம். இப்போது கழிப்பறையை திறக்காமல் பேரூராட்சி நிர்வாகம் பூட்டியே வைத்திருக்கிறது. இதனால் நாங்கள் அருகில் உள்ள குளக்கரையைத்தான் கழிப்பிடமாக பயன்படுத்துகிறோம் என்றார்.
8வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சித்ரா கூறுகையில்... காலை மற்றும் மதிய நேரங்களில் எங்கள் பகுதி பெண்கள் கழிப்பறை பூட்டிக் கிடப்பதால் திறந்தவெளியைத்தான் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். கழிப்பிடத்திற்கு செல்லும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்பகுதியைச் சேர்ந்த எம்.அனுசுயா கூறுகையில்... மாவட்ட நிர்வாகம் திறந்த வெளியை கழிப்பறையை பயன்படுத்தக்கூடாது என்கிறது. எங்களுக்கோ கழிப்பறை வசதி கிடையாது இருக்கும் கழிப்பறையை பேரூராட்சி நிர்வாகம் பூட்டிவிட்டால் நாங்கள் கழிப்பறையாக எதை பயன்படுத்துவோம் என்றார். 8வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள நான்குத்தெரு மக்களுக்கும் முறையான கழிப்பறை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியைத்தான் கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த நடவடிக்கை எடுத்து சித்தையன்கோட்டையில் பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை திறக்க உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!