![mangalampettai](http://image.nakkheeran.in/cdn/farfuture/UNL8XDFCDMs6FhhcHCnqQcQJB0F7bHnSFKxdtF3F-_g/1593413779/sites/default/files/inline-images/652_14.jpg)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது சின்னபருர். மங்கலம்பேட்டை காவல் நிலையம் எல்லைக்குட்ட இந்தக் கிராமத்தில் கடந்த 21ஆம் தேதி ஒரு வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு 66 பவுன் தங்க நகைகள் 3 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அதேபோல் விருத்தாசலம் அருகே உள்ள கோமங்கலம் பூண்டியங்குப்பம் கறிவேப்பிலகுரிச்சி ஆகிய பகுதிகளில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசார் திணறி வந்தனர்.
இதனிடையே மாவட்ட எஸ்.பி. அபிநவ், விருத்தாச்சலம் டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் தாமரை பாண்டியன் மற்றும் சக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று மாலை ஆலடி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா இன்ஸ்பெக்டர் தாமரை பாண்டியன் ஆகியோர் விரட்டி குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே பைக்கில் வந்த மூவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரண்பாடாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் மங்கலம்பேட்டை அருகே உள்ள மு.பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி, அவர் மனைவி மருதாயி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த பாபு ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இவர்கள் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூபாய் 75,000 பணம், 3 பவுன் நகை, 2 டூவீலர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமசாமி, அவரது மனைவி மருதாயி, பாபு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களிலேயே கொள்ளையர்களை பிடித்துள்ள போலீசாரை காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.