தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டச் செயலாளர் மாதவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு குடிமராமத்து நிதி ஒதுக்கீடு செய்தது. சிறப்பு நிதியின் கீழ் நடைபெற உள்ள பணிகளைக் கண்காணிப்பதற்கு உயர்நிலை அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள்.
கடலூர் மாவட்டம் காவரி டெல்டா பகுதியின் கடைக்கோடி மாவட்டமாகும். இந்த மாவட்டத்திற்கு காவிரி டெல்டா பகுதி சிறப்பு நிதி ஒதுக்கீடு எதுவும் தரப்படவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரிதும் கவலையை உருவாக்கி உள்ளது. காவிரி டெல்டா மாவட்டம் என்று சிறப்பு நிதி ஒதுக்கும்போது, கடலூர் மாவட்டத்தைச் சேர்க்காமல் விட்டது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். காவிரி டெல்டா பகுதியைக் காப்பாற்றுவதாக கடந்த வருடம் அறிவித்த தமிழக முதல்வர், கடலூர் மாவட்டத்தில் உள்ள டெல்டா பகுதியையும் சேர்த்து சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதனை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.