Skip to main content

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று 26 ஆக உயர்வு! ஊரடங்கு தீவிரம்!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை  20 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் 5 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, கண்கணிப்பில் உள்ளனர். மேலும் இவர்களின் உறவினர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 600-க்கும் மேற்பட்டவர்களுக்கும் உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் பெரும்பாலானோருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. 
 


 

 

cuddalore

 

அதேசமயம் நேற்று முன்தினம் நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவரின் 2 வயது பெண் குழந்தைக்கும், சிதம்பரத்திலிருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவரின் 6 வயது ஆண் குழந்தைக்கும், லால்பேட்டையில் இருந்து டெல்லி மாநாடு சென்று வந்தவரின் 58 வயது மனைவிக்கும், 31 வயது மகனுக்கும் கரோனா உறுதியானது. அதேபோல் பண்ருட்டியிலிருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவரின் 40 வயது மனைவிக்கும், 10 வயது மகனுக்கும் நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில்  பாதிப்பின் எண்ணிக்கை 20ஐ தாண்டியதால் 'ரெட்அலர்ட்' மாவட்டமாக வைக்கப்பட்டுள்ளது.
 

இதனிடையே வைரஸ் தொற்றின் பாதிப்பு 26 உயர்ந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு மேலும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நெல்லிக்குப்பம்,  பண்ருட்டி பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்  அன்புச்செல்வன்,  "கடலூரில் மே 3-ம் தேதி வரை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தொற்று பரவாமல் இருக்க வீடு வீடாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். முகக் கவசம் இல்லாமல் வெளியே வரும் நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனைத்து நகராட்சிகளிலும் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது நடைமுறையில் தொடர்ந்து இருக்கும்"  என்றார் 
 

http://onelink.to/nknapp

 

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக இருப்பதால் எவ்விதத் தளர்வும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில்,  நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவை பொருட்களை வாங்க வெளியே வருவதற்கு அனுமதி அட்டையில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் வெளியே வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அலட்சியமாக அனுமதி அட்டை இல்லாமல் வெளியில் வந்தவர்களை காவல்துறையினர் அதிரடியாகத் திருப்பி அனுப்பினர். மேலும் அனுமதி அட்டையை வாகனத்தில் ஒட்டாமல் வந்தவர்களைக் கடுமையாக காவல்துறையினர் எச்சரித்த பின்னர் வாகனத்தில் ஒட்டினர்.
 

 

வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்கு காவல்துறை, மருத்துவதுறை, சுகாதாரத்துறை தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் இரவு பகலாக உழைத்து வரும் நிலையில் பொது மக்கள் அலட்சியமாக வெளியே சுற்றித் திரிவது வேதனை அளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


 

சார்ந்த செய்திகள்