கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி திலகவதியின் குடும்பத்தினரை சந்தித்து தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் வ.கௌதமன் ஆறுதல் கூறினார்.
பின்பு செய்தியாளர்களிடம் கவுதமன் பேசியபோது, ‘’கல்லூரி மாணவி திலகவதி பச்சைப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழக மண்ணில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை கூடிக் கொண்டே இருக்கிறது. கல்லூரியில் படிக்க கூடிய பெண்கள் வகுப்பறையில் கொலை செய்யப்படுவதும், வீட்டுக்குள் புகுந்து கொலை செய்யப்படுவதும், ரத்தவெள்ளத்தில் மிதப்பதும் இந்த ஆட்சிக்கு படுதோல்வியைத் தான் இது கொடுத்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் பெண்கல்விக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
பெண்கள் படிக்கப்போவது பெரிய விஷயமாக இருக்கிறது. அதனால் பள்ளி, கல்லூரி படிக்கக்கூடிய பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கில் காவல்துறை மிக மோசமான நடவடிக்கையை பின்பற்றி இருக்கிறது. குற்றவாளி பேசிய வீடியோவை சமூகவலைதளத்தில் யார் விட்டது..? இவ்வழக்கை உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த காட்டுமிராண்டித்தனமான, மனிதத்தன்மையற்ற செயலை யார் செய்திருந்தாலும் அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும்.
இது மாதிரி கேடுகெட்ட படுபாதக கொலைகள் இந்த மண்ணில் நடந்து கொண்டே இருக்கிறது. இது திலகவதியோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் விழிப்புணர்வுடன் வாழ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடம் வைக்க வேண்டும். பிள்ளைகளிடத்தில் வன்முறை கூடாது, இது சரியானதல்ல என்று பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க வேண்டும். இதையெல்லாம் அரசு உடனடியாக செய்ய வேண்டும் .
திலகவதியின் குடும்பத்திற்கு உடனடியாக ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும். திலகவதியை கொலை செய்தவர் எந்த கட்சியாக, எந்த இனமாக, எந்த சாதியாக இருந்தாலும் அவரை காப்பாற்ற நினைக்க கூடாது. அவர்கள் கடுமையான மன்னிக்க முடியாத குற்றவாளி. இந்த காட்டுமிராண்டி செயலை செய்தது யாராக இருந்தாலும் தப்பிக்க விடக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இல்லாத பட்சத்தில் கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டியது இருக்கும்.
காவல்துறை, நீதித்துறை, அரசு தனது கடமையை சரியாக செய்யும் என்று நம்புகிறோம். இல்லாத பட்சத்தில் அதற்கான எதிர்வினையை சந்திக்க வேண்டி இருக்கும்’’என்று தெரிவித்தார்.