கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இலங்கியனூர் கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் வழியாக விருத்தாச்சலம் - சேலம் செல்லும் ரயில்வே இருப்பு பாதை அமைந்துள்ளது.
சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பிஞ்சனூர், வலசை, நல்லூர் உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், விவசாய விளைபொருட்கள் வாங்கவும், எடுத்து செல்லவும், பள்ளி செல்லும் மாணவர்கள் என தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வூரில் உள்ள இருப்பு பாதை வழியாக கடந்து செல்கின்றனர். ஆனால் இரயில்வே நிர்வாகம் இப்பாதையை பயன்படுத்த கூடாது என்றும், அதையும் மீறி கடந்து சென்றால் அபராதம் மற்றும் தக்க தண்டனை வழங்கப்படும் என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இரயில்வே கேட் அமைத்து தரக்கோரியும், பொதுமக்கள் பயன்படுத்தும் வழியை தடை செய்ய கூடாது என வலியுறுத்தி விருத்தாச்சலம் - சேலம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 20 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறி தன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.