கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி சோதனைசாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் 11.08.2019 இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். புதுச்சேரியில் இருந்து வந்த அனைத்து வாகனங்களையும் மறித்து தீவிர சோதனை நடத்திக்கொண்டிருந்த போது அருகில் வந்த பொலீரோ காரை நிறுத்துவதற்கு முன்பாகவே காரை ஓட்டியவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரில் இருந்த பெண்ணை பிடித்ததுடன், காரிலிருந்த 144 மதுபாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயத்தையும், அவற்றை கடத்த பயன்படுத்திய கார் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.
அந்த பெண்ணை விசாரித்ததில், ‘எனது பெயர் சமுத்திரக்கனி(48). விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள சூலாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி. நாங்கள் கூலி வேலை செய்ததுடன் புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து தியாகதுருகம் பகுதியில் அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வந்தோம். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். எனது கணவர் இறந்ததால் தற்போது சீர்காழி அடுத்த சட்டநாதபுரத்தில் வசித்து வருகிறேன்.
என் மீது விழுப்புரம் மாவட்டத்தில் சாராய வழக்குகள் உள்ளன. நான் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தபோது அம்மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தேரேசனுடன் பழக்கம் ஏற்பட்டது. நான் புதுச்சேரியிலிருந்து மது, சாராய பாட்டில்கள் கடத்தும் போது அவர் பல வகைகளில் உதவிகள் செய்தார். பின்னர் அவர் கடலூருக்கு மாறுதலாகி வந்த பிறகு நேரில் சந்தித்து எனது குடும்ப கஷ்டங்களை கூறினேன். அதனால் என்னை புதுச்சேரிக்கு காரில் அழைத்து சென்றார். அங்கு மது, சாராய பாட்டில்கள் வாங்கி கொண்டு சீர்காழி செல்வதற்காக திட்டமிட்டோம்” என்று கூறியுள்ளார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுந்தரேசன் சாராய வியாபாரி சமுத்திரக்கனியுடன் பழக்கம் வைத்துக்கொண்டு விதவையான அவருக்காக புதுச்சேரியில் இருந்து அவ்வப்போது மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்துள்ளார். சுந்தரேசன் இன்ஸ்பெக்டர் என்பதால் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராயத்தை வாகனத்தில் கடத்தி வருவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. சோதனை சாவடியிலும் அவரது காரை பணியில் இருக்கும் போலீசார் சோதனை செய்வது கிடையாது. இதனால் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், சமுத்திரக்கனிக்கு தொடர்ச்சியாக உதவி செய்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் சுந்தரேசனின் பழக்கத்தை பயன்படுத்தி, சமுத்திரக்கனி இதை தொழிலாகவே செய்து வந்துள்ளார். இதுதவிர இன்ஸ்பெக்டர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து அவரை விழுப்புரத்தில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கடலூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கிருந்தும் சமுத்திரக்கனியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவருக்கு புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து கொடுத்துள்ளார். உள்ளூர் போலிசாரிடம் சிக்கினால் அவமானம் என கருதி தப்பிக்க முயற்சித்து வசமாக மாட்டிக்கொண்டார்.
அதையடுத்து கடலூர் மாவட்ட (பொறுப்பு) காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரேசனை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டிய காவல்துறை இன்ஸ்பெக்டரே விருப்பமான விதவையின் வாழ்வாதாரத்துக்கு உதவ போய் தன் எதிர்காலத்தை இழந்து நிற்கிறார்.