சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்தவர் கிருபாகரன். அலோபதி மருத்துவர். இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து இணையதள லிங்க் ஒன்று வந்திருந்தது. அந்த இணைப்பைத் திறந்து பார்த்தபோது, ஷேர் மார்க்கெட் மற்றும் கிரிப்டோகரன்சி திட்டங்களில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்றும், தங்கள் ஏஜென்சி மூலமாக முதலீடு செய்தால் உறுதியாக லாபம் பெற்றுத் தரப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
அதை நம்பிய கிருபாகரன், ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலீடு செய்தார். அதன்மூலம் அவருக்கு எடுத்த எடுப்பிலேயே 1.90 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. இதனால் அந்த நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்தார். அதன்பிறகு சிறிது சிறிதாக 80 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் முதலீடு செய்த பணத்திற்கான லாபம், அசல் திரும்பி வரவில்லை. அந்த இணையதளத்தில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்தது.
இதன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருபாகரன், இதுகுறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். ஆய்வாளர் கைலாசம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இணையவழியில் நூதன மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவரே 80 லட்சம் ரூபாய் பறிகொடுத்து இருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.