சென்னை, மணலி பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் (84). போக்குவரத்துத் துறையில் ஊழியராகப் பணிபுரிந்த இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகள் ஷீலா (55). ஜாஸ்மின் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அதனால், ஷீலா திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாயை பராமரித்து வந்துள்ளார். மேலும், தனது தந்தையின் பென்ஷன் பணத்தை வைத்து இருவரும் தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாள்களாக ஷீலா வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. அவரது வீடும் பூட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று (17-10-23) ஷீலாவின் வீட்டிலிருந்து பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து மணலி புதுநகர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த காவல்துறையினர், ஷீலாவின் வீட்டை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தபோது, அங்கு ஷீலா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஷீலாவின் உடல் பக்கத்தில் அவரது மனநிலை பாதிக்கப்பட்ட தாய் ஜாஸ்மின் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் ஷீலாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், மகள் இறந்தது தெரியாமல் தாய் ஜாஸ்மின், மகளின் உடல் அருகே கடந்த 3 நாள்களாக இருந்துள்ளார் என்று தெரியவந்தது. மேலும், ஷீலா இறப்பு குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.