Skip to main content

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

crackers plant incident in sivakasi



விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில், நாக்பூர் உரிமம் பெற்ற தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலையில், பிப்ரவரி 25- ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டு, 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

30- க்கும் மேற்பட்ட அறைகளில், 80- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஃபேன்ஸி ரகப் பட்டாசுகளில் மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு, இவ்வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், அருகிலுள்ள அறைகளுக்கும் தீப்பரவ, அறைகள் தரைமட்டமாயின. வழக்கம் போல, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

காயம் மிக அதிகமாக உள்ள இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தனர். இந்த நிலையில், இருவரில் ஒருவரான மாரியப்பன், சிகிச்சை பலனின்றி இன்று (27/02/2021) உயிரிழந்தார். அதனால், பலி எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்