![The court rejected the father's request regarding the cell phone of the Kallakurichi student](http://image.nakkheeran.in/cdn/farfuture/20HTP0XpHdULIkG6ipL5yQB5La2NWBl0r89G46iTbF8/1671798248/sites/default/files/inline-images/b30_15.jpg)
கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் குறித்து தந்தை வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வந்த சக்தி இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட கலவரத்தில் பள்ளியானது அடித்து நொறுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது குறிப்பிட்ட வகுப்புகள் மட்டும் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.
மாணவி உயிரிழப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனது மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் எனவும், மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நான்கு முறை தொடர்ந்து சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை தற்பொழுது வரை பெற்றோர் ஒப்படைக்கவில்லை. அதை ஒப்படைத்தால்தான் விசாரணை முழுமையாக நிறைவுபெறும். விசாரணைக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் தேவைப்படும் எனவும் போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்டது.
'செல்போனை ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நியாயமாக நடைபெறும் என்று நினைக்கிறீர்கள்' என நீதிபதிகள் மாணவியின் பெற்றோர் தரப்புக்குக் கேள்வி எழுப்பினர். அதற்கு மாணவியின் பெற்றோர் தரப்பு அவர் விடுதியில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தவில்லை என்றும், விடுதி காப்பாளரின் செல்போனைத்தான் பயன்படுத்தினார் என்றும் விளக்கம் அளித்தனர். இந்த விளக்கத்தைப் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அந்த செல்போனையும் ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மாணவியின் பெற்றோரான உங்களை விசாரிக்க நேரிடும் என எச்சரித்து வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மாணவியின் தந்தை ராமலிங்கம் செல்போனை காவல்துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் தரப்பிடம் ஒப்படைக்க அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். செல்போனை பெற்றுக்கொள்ள அரசு வழக்கறிஞர்கள் மறுப்பு தெரிவித்ததோடு, விசாரணை அதிகாரியிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றம், மாணவியின் தந்தை ராமலிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது.