நாகை மாவட்டத்திலிருந்து 300க்கும் மேற்பட்டவர்கள் விசைப் படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் திரிகோணமலையில் வைத்து, ஒரு படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், அந்தப் படகையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த வாரம் இதேபோன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மண்டபம் பகுதி மீனவர்கள் 9 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது மேலும் 10 மீனவர்களைக் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேருக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் இலங்கை திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு, தாயகம் அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.