அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கரூா் மாவட்ட ஆட்சியரை தகாத வார்த்தைகளால் பேசியதாக, அரவக்குறிச்சி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி, மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியை பயன்படுத்தக்கோரி, செந்தில்பாலாஜி மனு அளித்ததாகவும், ஆனால்.. அவரை ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்காமல் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒருமுறை அமைச்சர், இரண்டு லட்சம் மக்களின் பிரதிநிதி என்ற முறையிலேயே செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியரை சந்தித்ததாகவும் வாதிட்டார். எந்த ஒரு மிரட்டலும் விடுக்கவில்லை என்றும், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதை வைத்து வழக்கு தொடங்க உள்ளதாகவும், நான்கு நாட்கள் கழித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது ஒரு திட்டமிடப்பட்ட வழக்கு என்றும் அவர் வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட கூடுதலாக வந்ததாகவும், கலெக்டரிடம் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும், அதன் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.