
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதி ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் அடையாளம் தெரியாத இளைஞர் மற்றும் இளம்பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே நிலைய போலீசார் உடல்கள் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. விசாரணையில் வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே அரும்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(27). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கு திருமணமான நிலையில் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகிலா(மாற்றுச் சமூகத்தை சேர்ந்தவர்) என்ற கல்லூரி மாணவியுடன், மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில் மணிகண்டனும், கோகிலாவும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து பெண்ணின் வீட்டார் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இருவரையும் விசாரணைக்கு வரும் படி அழைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராவதாக கூறி இருவரும் கடலூருக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளனர். ஆனால், விசாரணைக்கு சென்றால் தங்களை பிரித்து விடுவார்கள் என்று எண்ணிய மணிகண்டனும், கோகிலாவும் கட்டிப்பிடித்தவாறே ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
தங்களை பிரித்து விடுவார்கள் என்று எண்ணி காதல் ஜோடி தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.