ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி அடுத்த ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக சோளக்காடு ஒன்று உள்ளது. ரமேஷ் தினமும் சோளக்காட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து பார்வையிடுவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்று ரமேஷ் தனது சோளக்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏரியூர் - மல்லியம்மன் செல்லும் நடைபாதையில் காலணித் தடங்கள் இருந்தன. இதையடுத்து ரமேஷ் அங்கு சென்று பார்த்தபோது அங்குள்ள ஒரு பகுதியில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அந்தப் பகுதியில் பாத்திரங்களும் இருந்தன. இதுகுறித்து ரமேஷ் கடம்பூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், யாரோ மர்ம நபர்கள் ரமேஷின் காட்டில் நாட்டுத் துப்பாக்கியைப் பதுக்கி வைத்து வேட்டைக்குச் செல்லும்போது பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடம்பூர் போலீசார் ரமேஷ் காட்டை ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது நாட்டுத் துப்பாக்கியைத் தேடி அதே பகுதியைச் சேர்ந்த வேட்டையன்(62), ராமர் (39) ஆகியோர் வந்தனர். அவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
போலீசார் விசாரணையில் வேட்டையன், ராமர் அவர்களது நண்பர்கள் மேலும் இரண்டு பேர் சேர்ந்து வேட்டையாடுவதற்காக ரமேஷ் சோளக்காட்டில் நாட்டுத் துப்பாக்கியை பதுக்கி வைத்தது தெரியவந்தது. வேட்டைக்குச் செல்லும் இவர்கள் மிருகங்களை வேட்டையாடி சோளக்காட்டில் கொண்டு வந்து அவற்றை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதற்காக காட்டில் பாத்திரங்களையும் வைத்திருந்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேட்டையன், ராமர் இருவரையும் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.