திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஒன்றியத்தில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த ஒன்றியத் தலைவர் பதவி, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பழங்குடியின சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டது.
திமுகவை சேர்ந்த ஒரு கவுன்சிலர், தான் பட்டியலினத்தவர் எனச்சொல்லி தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவர் பட்டியலினத்தவர் கிடையாது, எம்.பி.சி என அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதைப்போல், வருவாய்த்துறை தந்த பட்டியலினத்தவர் சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தந்தனர். அது போலிச் சான்றிதழ் என்றார்கள். இதனால், விவகாரம் நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது.
தற்போதுவரை, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி முதல் ஒன்றியக் குழு கவுன்சிலர்கள் தண்டராம்பட்டு ஒன்றியக் குழு அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். இதுகுறித்து கேட்டபோது, இந்த ஒன்றியத்துக்குத் தேவையான நிதியை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஒதுக்க மறுக்கிறார்கள். இதனால் எங்கள் கிராமங்களில் எந்த அடிப்படை வசதிகளும் செய்ய முடியவில்லை. இதனால் வாக்களித்த பொதுமக்கள் எங்களைக் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள், நாங்கள் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம். சேர்மன், வைஸ் சேர்மன் இருந்தாலாவது அவர்களிடம் முறையிடலாம், இங்கு அது இன்னும் முடிவாகாததால் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புகிறோம். அவர்கள், பதிலளிக்க மறுக்கிறார்கள். அதனால்தான் முற்றுகைப் போராட்டம் நடத்துகிறோம் என்றார்கள்.
பிப்ரவரி 10, 11, 12ஆம் தேதிகளில் தொடர்ச்சியாக 3 நாட்கள் முற்றுகைப் போராட்டம், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். பிப்ரவரி 13ஆம் தேதி, மாவட்ட திட்ட அலுவலர் ஜெயசுதா, போராட்டம் நடத்திய கவுன்சிலர்களிடம், நிதி ஒதுக்குகிறேன் என வாக்குறுதி தந்துள்ளார். ஆனாலும் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்காததால் பிப்ரவரி 12ஆம் தேதி அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகளை, வெளியே அனுப்பி அலுவலகத்தைப் பூட்டி போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து கவுன்சிலர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், நிதி ஒதுக்கவும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.