மாநகராட்சி பெண் கவுன்சிலரின் கணவர் ஒருவர் அதிகார தோரணையில் சுகாதார அலுவலகத்திற்கு சென்று வருகை பதிவேட்டை எடுத்து சோதனை மேற்கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் தலைவர், துணை தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கும் பெண்களின் கணவர்கள் அந்த பதவிகளை அதிகாரத்துடன் பயன்படுத்திக்கொள்வது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாகி பூதாகரமாகும். மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில், குறிப்பாக பெண் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் கணவர், தந்தை உள்ளிட்ட எந்த உறவினரின் தலையீடும் இருக்க கூடாது என்ற நிலையில் கோவையில் நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாநகராட்சி 61 வது வார்டு கவுன்சிலர் ஆதி மகேஸ்வரி. இவரது கணவர் திராவிட மணி. இன்று அதிகாலை 6 மணிக்கு சுகாதார அலுவலகத்தில் அதிகார தோரணையில் புகுந்த திராவிட மணி அங்கிருந்த சுகாதார ஆய்வாளரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு செய்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.