Skip to main content

வார்டு பிரச்சனையை எடுத்துகூறிய நபர்; சாதியை சொல்லி கடுமையாக தாக்கிய கவுன்சிலர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
councillor called the person who asked him to solve the sewage problem and beated him

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த குள்ளரங்கம்பாளையம் காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கோகிலா. இவர்களுக்கு சதீஸ்குமார் மற்றும் ரமணிசந்திரன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி ரமணிச்சந்திரன் தனது வீட்டின் முன்பு உள்ள சாக்கடை அடைத்துள்ளதாக 6-வது வார்டு கவுன்சிலர் கவின்குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவரது செல்போனை அவரது மனைவி எடுத்து பேசி உள்ளார்.

இதனையறிந்த கவின்குமார் ஆத்திரத்தில் சண்முகம் வீட்டுக்கு சென்று எப்படி என் மனைவியுடன் செல்போனில் பேசலாம் என்று சண்டையிட்டு உள்ளார். இந்நிலையில் மீண்டும் 19ம் தேதி கவுன்சிலர் கவின்குமார் தனது இரு நண்பர்களுடன் கோகிலா வீட்டிற்கு வந்து சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி கோகிலா மற்றும் ரமணிசந்திரன் ஆகியோரை கட்டையால் தலை மற்றும் இடது தோள்பட்டையில் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் ஜன்னல்களை உடைத்துள்ளனர்.

இதனையடுத்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததும் மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் காயமடைந்த ரமணிசந்திரன் மற்றும் பலத்த காயமடைந்த கோகிலா ஆகியோரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்‌. தொடர்ந்து அரச்சலூர் காவல்நிலையத்தில் கோகிலா அளித்த புகாரின்பேரில் 6-வது வார்டு கவுன்சிலர் கவின்குமார் மற்றும் நண்பர்கள் உட்பட மூவர் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கவுன்சிலர் கவின்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்