கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம்(100 நாள் வேலைத் திட்டம்) கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேல் மக்கள் பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பயன்படுவதாகவும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்று வருகிறது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 100 நாள் வேலை திட்டத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், “100 நாள் வேலைத் திட்டம் என்பது வெட்டியாக பலரும் சேர்ந்து புரணி பேசும் இடமாக இருக்கிறது. விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். பொருளாதாரத்தை வளர்க்கத் திட்டமிடாத அரசு சும்மா சோம்பி உட்கார்ந்து இருக்க பணம் கொடுக்கிறது” என்று காட்டமாக பேசினார். இதேபோன்று பல்வேறு இடங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தினை எதிர்த்தும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை தெரிவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சீமானின் தாயார் தங்களது கிராமத்திற்கு 100 நாள் வேலைத் திட்டம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீமானின் தாயார் அன்னம்மாள், தங்கள் கிராமத்திற்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி கிராம மக்களுடன் சென்று அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். பின்பு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளை உறுதியளித்ததைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிச்சென்றனர்.