முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் பிறந்தவர். ‘வெள்ளையனே வெளியேறு’ சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் ஆவார். இந்திய விடுதலைக்குப் பிறகு நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற 2வது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். பாரதிய ஜனசங்கத்தின் மக்களவைக் கட்சித் தலைவராகக் கடந்த 1957 முதல் 1977 வரை செயல்பட்டார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977-ல் வெளியுறவு அமைச்சராக அங்கம் வகித்தார். பாஜக தேசிய தலைவராக 1980 முதல் 6 ஆண்டுக்காலம் இருந்தார். இந்தியப் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று வாய்பாய்யின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் அவரது நினைவு இடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வாஜ்பாய் குறித்து தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்.
வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.