![Cottage brewer arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/I-g2DIGFNt_MpMgKW52x42TocsSxJkoqPFnCD80MuM0/1634706129/sites/default/files/inline-images/liquor_0.jpg)
கொளத்தூர் அருகே, வீட்டிலேயே குடிசைத் தொழிலாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்துவந்தவர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியில் சிலர் வீடுகளிலும், மலைப்பகுதிகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சி, பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இந்நிலையில், கொளத்தூர் காவல் நிலைய எஸ்.ஐ. நந்தகுமார் தலைமையில் காவல்துறையினர், நீதிபுரம் மேட்டுக்கோட்டை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த மணி (59) என்பவர் வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அங்கு ஒரு பேரலில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான 200 லிட்டர் ஊறல் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
மேலும், விற்பனைக்குத் தயார் நிலையில் வைத்திருந்த 5 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மணியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், கரோனா ஊரடங்கு காலத்தில் சரிவர வேலைவாய்ப்பு கிடைக்காததாலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததாலும், வீட்டிலேயே சாராயம் காய்ச்சி பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்துவந்துள்ளார். அதில் நல்ல லாபம் கிடைத்தால், அதையே குடிசைத் தொழிலாக தொடர்ந்திருப்பதும் தெரியவந்தது.