கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் மூன்று மாதத்திற்குத் தேவையான கரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
'தடுப்பூசி திருவிழா' மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தகுதி வாய்ந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி ரயில்வே அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், மறு அறிவிப்பு வரும் வரை யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றும் மருத்துவமனை சுவற்றில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், கரோனா தடுப்பூசி போடுவதற்காக வந்த மக்கள் பல மணி நேரம் காத்திருந்து, பின்னர் புறப்பட்டுச் சென்றனர்.
கரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், மருத்துவமனையிலேயே கரோனா தடுப்பூசி மருந்து பற்றாக்குறை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.