காவிரிக்காக சென்னை மெரினாவில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நடைபற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் அடுத்தடுத்து நடக்கிவிருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. இதேபோல் சென்னை வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டும் போராட்டமும் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. எனினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,
ஐபிஎல் போட்டியை நடத்த விடாமல் விரட்ட போராடிய அனைவருக்கும் நன்றி. ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறக் கூடாது என்ற போதும் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டதால் பாம்பு விடுவோம் என்றேன்.
காவிரிக்காக மெரினாவில் மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். ஜனநாயக வழியில் எங்களை போராட அனுமதிக்காவிட்டால் எங்களின் போராட்டம் வேறு திசையை நோக்கி இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.