டிசம்பர் 31- ஆம் தேதியுடன் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடியும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (28/12/2020) ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (28/12/2020) காலை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனையில் பிரிட்டனியில் உருமாறிய கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால் மேலும் சில தளர்வுகளை அளிக்கலாமா? கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா? என்பது குறித்தும் முதல்வர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் கருத்துக்கள் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்கும். அதன் பிறகு தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிப்பா? இல்லையா? என்பதை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.