இந்தியாவில் கரோனாவால் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையில் கரோனாவைத் தடுக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைப் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.
![Corona virus - Siddha medicine](http://image.nakkheeran.in/cdn/farfuture/Qs1cRLhHAg386s8YUxa7CIRcgJRD2FkwlMpC9DJPA3U/1584992311/sites/default/files/inline-images/1111111_91.jpg)
தற்போது தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் உள்ள சித்த மருந்து கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. இது குறித்து அங்கு மருந்து வாங்க வந்தவர்களிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள், "கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. அதற்கு யாராலும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சித்த மருத்துவ சங்கத்திலிருந்து அந்த வைரஸூக்கு மருந்து அறிவித்துள்ளார்கள். சுபா சூர குடிநீர் என்று 14 மூலிகைகள் அடங்கிய மருந்தைச் சாப்பிட்டால், சளி, காய்ச்சல், இருமல் மற்றும் நுரையீரல் தொற்று என அனைத்தும் சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர். என்னதான் நாம் ஆங்கில முறை மருந்துகளைப் பின்பற்றினாலும், நம்முடைய நாட்டு மருந்துகளுக்கென்று தனி மகத்துவம் உண்டு. அதனால்தான் கூட்டம் இவ்வாறு அலைமோதுகிறது" என்று தெரிவித்தனர்.