கரோனா பாதித்த பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக் கோரிய மனுவுக்கு மே 14- ஆம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில், கரோனா பாதித்த வீடுகளையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல்துறை தடுப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் வசிக்கும் பகுதிகளிலும், தேவையில்லாத பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக் கோரி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பல பகுதிகளில் தெருக்களிலிருந்து வெளியே செல்ல முடியாத அளவிற்குத் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கரோனா தொடர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் தடுப்புகளை அகற்றாமல் காவல்துறை தொடர்ந்து வைத்துள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், தேவையில்லாத சட்டவிரோதமான தடுப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகளின் வினித் கோத்தாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு முன்பு வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கரோனா பாதித்த பகுதிகளுக்கு மட்டுமே தடுப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி அதற்கான பட்டியலைத் தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது. அதே வேளையில், சட்டவிரோதமாக வெளியே சுற்றுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பின்னர், மனுவுக்கு மே 14- ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 14- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.