கரோனா ஊரடங்கால் 11க்கும் மேற்பட்ட கடும் நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசின் உத்தரவினை காற்றில் பறக்கவிட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் குவிந்துள்ளதால் தீவுப்பகுதியில் அச்சம் தொற்றியுள்ளது.
கரோனா ஊரடங்கால் அனைத்துத் தொழில்களும் முடங்கி கிடந்த நிலையில், மீன்களை பிடித்து வருபவர்கள் ஏலக்கூடங்களில் ஏலம் விடக்கூடாது, ஏலக்கூடங்களில் மீனவர்கள் கூட்டம் இருக்கக்கூடாது. இறங்கு தளங்களில் விற்பனை செய்யக்கூடாது, குறிப்பாக பிடித்து வரப்படும் மீன் அந்தந்த கிராமங்களிலேயே விற்பனை செய்யவேண்டும், தொழிலுக்கு செல்லும்போது கடலில் ஒன்றன்பின் ஒன்றாகவே படகு செல்லவேண்டும், படகில் இருக்கும் மீனவர்கள் சமூக விலகலை பின்பற்ற வேண்டும். அதே வேளையில் முக கவசமும், கையுறையும் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க அனுமதித்தது அரசு. இந்நிலையில், இன்று பாம்பன் வடக்கு துறைமுகத்தில் தாங்கள் பிடித்து வந்திருந்த மீனை இறக்கும் பணியிலும், அதனை வாங்கி செல்ல வந்த வெளியூர் வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒரே நேரத்தில் அங்கு குவிந்தனர். அத்துடன் இல்லாமல் அங்கிருந்த மீனவர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணியாமலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தனை களேபரம் நடந்தும் இதனை ஒழுங்குப்படுத்த வேண்டிய மீன்வளத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியோர் கண்டும் காணாமல் இருந்ததால் தீவு மக்களிடையே கரோனா தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததுதான் வேதனையே என்கின்றனர் தீவுவாசிகள். தீவுவாசிகளின் அச்சத்தை போக்கவெண்டுமென்பதே அங்குள்ள சமூக ஆர்வலர்களின் கோரிக்கை..!