இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே திமுக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மதுரை மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும்; கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடாது என நிர்வாகிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் கரூர் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஆலோசனை நடத்தினர்.
கடந்த முறை கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் எனப் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு சிலர் தற்போது கரூரில் எம்பியாக உள்ள ஜோதிமணியின் பெயரைக் குறிப்பிட்டு இந்த முறை மீண்டும் அவருக்கு வழங்கக் கூடாது. காங்கிரசுக்கே கொடுத்தாலும் அவரை வேட்பாளராக மீண்டும் நிறுத்தக்கூடாது உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தலைமை யாரை கை காட்டுகிறதோ அவர்களுக்குத்தான் பணியாற்ற வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.