"நுண் கடன் நிதி நிறுவனங்கள் கட்டாய வசூல் செய்வதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதை உடனே கவனத்தில் எடுத்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான நா. பெரியசாமி.
அவர் விரிவாக நம்மிடம் பேசுகையில், "உலக நாடுகளில் பரவி வரும் கோவிட் 19 நோய்ப் பெருந்தொற்று மிகப் பெரும் சவாலாக உள்ளது. நமது நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தப் பெருந்தொற்று பரவல் தடுப்புக்காக பொது முடக்கம், ஊரடங்கு உத்தரவுகள், தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம் போன்றவற்றின் கீழ் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
சென்ற மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை சுமார் 80 நாட்கள் ஊரடங்கால் வேலையும், வருமானமும் இல்லாமல் மக்கள் வீடுகளில் முடங்கப்பட்டனர். தனிநபர் இடைவெளி, தனிமைப்படுத்திக் கொள்வது, விலகியிருப்பது போன்ற நடைமுறைகளால் உடல் உழைப்பு தொழிலாளர்கள், கிராமத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் , தையல், முடி திருத்தகம், சலவைக் கடைகள், செருப்புத் தைத்தல், கைத்தறி, விசைத்தறி, கட்டடக் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் சாலையோரங்களில் வியாபாரம் செய்து வாழ்ந்து வரும் 'சுய வேலைவாய்ப்பு பெற்றோர்' போன்ற மிகப் பெரும் பகுதியினரின் வாழ்க்கை நிலைகுலைந்து போயுள்ளது.
ஊரடங்கு கால நெருக்கடிகளைச் சமாளிக்க அரசு சார்பில் குடும்பத்திற்கு தலா ரூபாய் ஆயிரம் ரொக்கம் கொடுக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு தலா 5 கிலோ உணவு தானியம், சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட சில உணவுப் பண்டங்களும் ரேசனில் வழங்கப்பட்டது. இது சாவின் விளிம்பில் இருப்போருக்குச் சிறிதளவு உயிர் தண்ணீர் ஊற்றியது போல் தான்.
இதுதவிர வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவைகள் 3 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கடன் தவணைகளை மூன்று மாத காலத்திற்கு வசூலிக்காமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் வங்கிகளில் பெற்ற கடன் தவணைகளை 6 மாத காலத்திற்கு ஒத்தி வைத்து இந்த கால அவகாசம் மக்களுக்கு ஏதோ ஒரு சலுகை போல் வழங்கப்பட்டது.
மக்களின் துன்ப துயரத்தைக் கடுகளவு அரசு புரிந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தக் கடன் தவணைகளை ஒத்தி வைத்தது மட்டும் கூடாது. கடன்களுக்கான வட்டித் தொகையை வங்கிகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இதுதான் மக்களின் கோரிக்கை இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நாட்டின் உச்சநீதி மன்றமும் ஆதரித்துக் குரல் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பையும் , ரிசர்வ் வங்கியின் அறிவுரைகள் குறித்து ஒரு துளியும் கருத்தில் கொள்ளாமல் வங்கிகளும், நுண்கடன் நிறுவனங்களும் கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டு வருகின்றன என்பது தான் வேதனையான உண்மை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் வசூல் நடைமுறை இந்த கரோனா கால நெருக்கடிகளால் நிலைகுலைந்து நிற்கும் அப்பாவி ஏழைப் பொது மக்களை ஆத்திரமூட்டி வருகின்றது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் பதற்றமும், அமைதியற்ற நிலையும் உருவாகியிருக்கிறது. உதாரணத்திற்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடன் பெற்ற மக்கள் நிதி நிறுவனங்கள் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக மாநில அரசின் அதிகாரிகள் முன்பு நடைபெற்ற அமைதி கூட்டத்தில், ஒப்புக் கொண்டபடி வங்கி அலுவலர்கள் நடந்து கொள்ளாமல் மீண்டும், மீண்டும் கட்டாயக் கடன் வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் மிரட்டப்படுகிறார்கள்.
ஆகவே அரசுக்கு நாங்கள் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், தமிழ்நாடு முழுவதும் நுண் கடன் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கட்டாயக் கடன் வசூலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கடன் வசூலுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ள கால அவகாசம் பயனாளிகளுக்குக் கிடைக்கச் செய்ய அந்தந்த அரசு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.
கரோனா கால நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு ஒரு வருட காலத்திற்கான வட்டித் தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அசல் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடித்து எளிய தவணைகளாக மாற்றியமைக்க வேண்டும். கொரோனா நோய்த் தடுப்பு கால நெருக்கடிகளைச் சமாளித்து, மறு வாழ்வையும், தொழிலையும் தொடங்க புதிய கடன் வழங்க வேண்டும். இது இந்த அவசர காலத்தின் தேவையாகும். ஆகவே தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை நாங்கள் கேட்டுக்கொள்வது, இதன் தொடர்பாக நிதித்துறை அதிகாரிகள், வங்கி மற்றும் வங்கிசார நிதி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர்களை அழைத்துப் பேசி கடன் வசூல் துன்பநிலையிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் தமிழக அரசு வழங்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறதோ அதேபோல் வறுமையால் கடன் பெற்று இப்போது வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் மக்களைக் கடன் சுமை என்ற வைரசிடமிருந்தும் காக்க வேண்டும்" என்றார்.