கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பயந்துகொண்டு ஹெலிகாப்படரில் பறக்கிறார் முதல் அமைச்சர். அமைச்சர்கள் மக்களுக்கு பயந்துகொண்டு ஓடுகிறார்கள். நீங்களெல்லாம் மக்கள் பிரதிநிதியா இருக்க லாயிக்கில்லை என்று மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை தமிழ்ச்செல்வன் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கஜா புயல் மூன்று மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. அமைச்சர்கள் எல்லோரும் டவுன் பக்கம் யார் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மட்டும் பார்க்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகிறார்கள். சின்ன சின்ன உட்கிராமங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரம்பங்குடி, ஊரணிபுரம், காட்டாதி, நம்பிவயல், வேப்பங்காடு, பேராவூரணி... இப்படி மெயின் ரோட்டில் இருந்து உள்ளே சென்றால் இருக்கக்கூடிய கிராமங்களில் மின்சாரம் வருவதற்கு ரொம்ப நாள் ஆகும்.
பொதுமக்கள் மறியல் செய்த பிறகு ஜெனரேட்டர் ரெடி பண்ணுகிறோம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் ஜெனரேட்டர் இன்னும் இந்த உட்கிராமங்களுக்கு போகவில்லை. குடிநீர் மக்களுக்கு கிடைக்கவில்லை.
இரண்டு, மூன்று கிராமங்களில் நாங்கள் சொந்தமாக டிராக்டர் வைத்து, பம்பிங் செய்து தண்ணீர் எடுத்து கொடுக்கிறோம். அரசாங்கம் இதை எப்போது செய்யப்போகிறது.
எல்லா இடத்திலேயும் அம்மா அரசு, அம்மா அரசு என முதல் அமைச்சரில் இருந்து அமைச்சர்கள் வரை எல்லோரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
கஜா புயலின் தாக்கத்தால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்களின் வாழ்வாதார உரிமைகள் பறிபோய்விட்டது. குடிநீர் கிடைக்கவில்லை. மின்சாரம் கிடைக்கவில்லை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
ஜெனரேட்டர் எடுத்து வந்து மக்களுக்கு உதவலாம். மற்ற மாவட்டங்களில் இருந்து மந்திரிகள் நினைத்தால் கொண்டு வரலாம். முதல் அமைச்சரும், அமைச்சர்களும் இந்த மூன்று மாவட்டங்களில் கவனம் செலுத்தாமல் பல இடங்களில் கூட்டம் போடுவது, ரோடு திறப்பது போன்றவற்றில் கலந்து கொள்கிறார்கள். இதனை நான் டிவியில் பார்த்தேன்.
இதையெல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முதல் அமைச்சர்களும், அமைச்சர்களும் கவனம் செலுத்தலாம். ஆனால் கவனம் செலுத்தவில்லை.
மக்களுக்கு பயந்துகொண்டு ஓடுவது, ஹெலிகாப்டரில் சுத்துறது, டவுனில் மட்டும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்ப்பது இதெல்லாம் எதற்காக. மக்கள் பிரதிநிதி, எப்ப மக்களுக்கு பயந்தாங்களோ அவர்கள் மக்கள் பிரதிநிதியா இருக்க லாயிக்கில்லை.
மக்கள் ஓட்டுபோட்டுத்தான் நாம ஜெயிச்சோம். நானும் ஒரு எம்எல்ஏ மும்பையில் ஜெயிச்சிருக்கேன். மக்கள் நம்மகிட்ட பாசமா வரணும். நாம அந்த மாதிரி நடந்துங்கனும். அப்படிப்பட்ட நிலைமை தமிழ்நாட்டில் வரணும். இவ்வாறு கூறினார்.