அரசுப் பணியாளர் தேர்வாணையம் அ.தி.மு.க வின் தலைமைக் கழகமாக ஏற்கனவே மாற்றப்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு இடையில், அரசுப் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது என்கிறார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். இது குறித்த அவரது அறிக்கை:
வேலை வாய்ப்புத் தேடும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதாக வரும் செய்திகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மாநில அரசில் உள்ள பதவிகளுக்கு போட்டித் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்வு செய்வது மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமை” என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 320 தெளிவாகக் கட்டளை பிறப்பித்திருக்கிறது. அந்த அரசியல் சட்டக் கடமையை தனியாருக்குத் தாரை வார்க்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் முயற்சிப்பது அரசியல் சட்ட விரோதம் என்பதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மாநில, சார்நிலை மற்றும் அமைச்சுப் பணிகளுக்கு நேரடி நியமனத்திற்கு போட்டித் தேர்வு, அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப்பணி மற்றும் மாநில குடிமைப் பணி அதிகாரிகளுக்கான அரையாண்டுத் தேர்வுகளை நடத்தும் மிக முக்கியமான பொறுப்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருக்கிறது. இந்த ஆணையம் நடத்தும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நம்பித்தான் எண்ணற்ற இளைஞர்கள் "க்ரூப் "ஒன் பதவிகளான சார்பு ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கும், அதே போல் க்ரூப்-II க்ரூப்-III, க்ரூப்- IV ஆகிய பல்வேறு அரசு பதவிகளுக்கும் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு முன் வருகிறார்கள்.
இரவு பகலாகப் படித்து அரசு ஊழியராகவோ, அரசு அதிகாரியாகவோ ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கிராமப்புற மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து சென்னையில் நெருக்கடி மிகுந்த விடுதிகளில் தங்கிப் படிக்கிறார்கள். இதுபோன்ற போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் வசதிக்காகவே தலைவர் கலைஞர் அவர்கள் உலகப்புகழ் பெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துக் கொடுத்தார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப்-I தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் அவ்வப்போது புகார்கள் வெளிவந்தாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்கும் என்று இன்னமும் லட்சக்கணக்கான கிராமப்புற- ஏன் நகர்ப்புற மாணவர்களும் நம்பி, தேர்வுபெற உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை தகர்த்து எறியும் விதத்தில் போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே பாலிடெக்னிக் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடுகள், இமாலய ஊழல்கள் எல்லாம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புகாரின் அடிப்படையில்தான் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பதை ஏனோ மறந்து விட்டு, போட்டித் தேர்வுகள் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க முயற்சிப்பது “கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்” என்பதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உணர வேண்டும்.
நேர்மையான தலைவரின் கீழ் உள்ள ஓர் அரசுப் பணியாளர் தேர்வாணையம் இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடும் இப்படியொரு விபரீத முடிவை எப்படி எடுக்க முயற்சிக்கிறது என்பதும், தனது அரசியல் சட்டக் கடமையிலிருந்து விலகும் பொறுப்பற்ற செயலை ஏன் அமல்படுத்தத் துடிக்கிறது என்பதும் மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. தகுதியில்லாதவர்களை எல்லாம் உறுப்பினர்களாக நியமித்து ஏற்கனவே அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிமுகவின் தலைமைக் கழகமாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில், போட்டித் தேர்வுகளைத் தனியாரிடம் ஒப்படைக்க நினைப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பது போல் தெரிகிறது. பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடும் உள்நோக்கத்துடன் அரசுப் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’’