உலகமே கரோனோ தொற்றினால் அலறிக்கொண்டு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், நோய் தொற்று பரிசோதனைக்கு உட்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தலில் இல்லாமல் வேலைக்கு சென்றதால் நோய் தொற்று ஏற்பட்டு அவர் மீது நோய் பரப்பியதாக வழக்கு பதிவு செய்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 108 ஆம்புலன்ஸ்சில் வேலை செய்த ஒருவருக்கு கரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கரோனோ தொற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பதால் அவரை வீட்டில் 24 நாட்கள் இருப்பதற்காக அறிவுறுத்தி வீட்டில் நோட்டிஸ் ஒட்டி சென்றனர்.
இந்த நிலையில் அவர் அரசு அதிகாரிகள் சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் சொந்தவூரான சின்னவரப்பாளையத்தை விட்டு வெளியேறி அவர் வெள்ளியணை 108 ஆம்புலன்ஸ்சில் வேலை செய்துள்ளார்.
இது குறித்து கடம்பங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பெயரில் வா்கல் போலிசார் ஆம்புலன்ஸ் ஊழியர் மீதும், திருச்சி 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் அறிவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஊழியர்கள், அவரின் பெற்றோர், ஊரில் அவருடன் பழகியவர்கள், வெள்ளியணையில் வேலை செய்த போது அவரிடம் தொடர்பில் இருந்தவர்கள் என 130 பேருக்கு கரோனோ நோய் தொற்று பரிசோதனை செய்து வருவதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் செல்வக்குமார் தெரிவித்தார்.