தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது போராடிய மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று மருத்துவமனையில் ரசிகர்களைக் கொண்டு ரஜினிகாந்த் நடத்தியது படபிடிப்பா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் நிகழ்வா? துணை முதல்வரை கூடச் சந்திக்க விரும்பாத பாதிக்கப்பட்டவர்கள் இவருடன் எப்படிச் சிரித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பார்கள்? இவ்வளவு பாதிப்பிற்கும் சமூக விரோதிகள் தான் காரணம் என்கிறார், சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள்? காயம்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களில் எத்தனை பேர் சமூகவிரோதிகள்? என்று அடையாளம் காட்டுவீர்களா? எல்லாம் தெரிந்த ரஜினி அவர்களே!
போராடும் மக்களைப் பொதுவாகச் சமூகவிரோதிகள் என்று கூறுவது அயோக்கியத்தனம். போராடுவது ஒன்றும் பொழுதுபோக்கோ நேர்த்திக்கடனோ அல்ல; போராடினால்தான் வாழமுடியும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். ரஜினிகாந்த் தான் சொல்கிறார் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலை நிர்வாகம் நீதிமன்றம் போனால் அவர்கள் மனுசனே இல்லை என்று, அவ்வளவு கொடிய ஆலையை மூட இதுவரை அவர் பேசியது என்ன? முன்னெடுத்த போராட்டங்கள் எத்தனை?
கற்பி! புரட்சிசெய்! ஒன்றுசேர்! என்கிறார் அண்ணல் அம்பேத்கர். நாங்கள் கற்பி! ஒன்றுசேர்! புரட்சிசெய்! என்கிறோம். மக்களுக்குக் கற்பிக்க வேண்டியது தானே கல்வி; கற்றதினால் ஆன பயன் என்ன? கற்றவை பற்றவைக்கத்தானே? தீயவை தீவைக்கத்தானே! மக்களுக்கு எது சரியானது என்பதைக் கற்பிக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது.
பணமதிப்பிழப்பின் போது மோடிக்கு வாழ்த்து தெரிவிக்க முடிந்த உங்களால் அது தோல்வி திட்டம் என்று உணர்ந்த பிறகும் வாய்திறக்க மறுப்பதேன்? தொடக்கத்தில் எதிர்த்து போராடிய நாங்கள் இப்போது தவறானவர்களா? சினிமாவில் மட்டும் வசனம் பேசி போராடுங்கள் போராடுங்கள் என்கிற ரஜினிகாந்த், உண்மையில் போராடுபவர்களைச் சமூகவிரோதிகள் என்பதா? காவலர்கள் மீது மக்கள் தாக்கியது தவறுதான்; ஆனால் அதேவேளையில் அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் ஏன் வலியுறுத்த மறுக்கிறீர்கள் ரஜினிகாந்த்?
பாஜக-வினர் மோடி, தமிழிசை, பொன்.இராதாகிருஷ்ணன், எச்.ராஜா, முதல்வர், அதிமுக அமைச்சர்கள் போன்றோர் சொல்வதையே ரஜினியும் வழிமொழிகிறார். ரஜினியின் குரல் அதிகாரத்தின் குரல்; அடித்தட்டு மக்களின் குரல் அல்ல! இதைவிடப் பெரிய அநீதிகள் நடந்தால் தான் முதல்வரை பதவி விலகக் கோருவாரா ரஜினி என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
போராட்டங்களே கூடாது என்றால், போராட வேண்டிய தேவையே இல்லாத ஒரு நல்ல அரசும் ஆட்சியும் இருந்துவிட்டால் நாங்கள் எதற்காகப் போராடப்போகிறோம்..? மக்கள் 100 நாட்களாக ஸ்டெர்லைட் மூடக்கோரி போராடிவருகிறார்கள்! இதில் எத்தனை நாள் மாவட்ட ஆட்சியரோ, துறைசார் அமைச்சரோ, முதல்வரோ, துணை முதல்வரோ நேரில் சந்தித்துப் பேசினார்கள்..? இதை ஏன் அரசு செய்யவில்லை என்று ரஜினியால் கேள்வி கேட்க முடியுமா?.
பிரச்சினைகளை மக்கள் மீது திணிக்கிற அதிகாரத்தை எதிர்த்து கேள்வியெழுப்ப துணிவில்லாதவர்கள், தன்னலமற்று மக்களுக்காகப் போராடுகிறவர்களைச் சமூகவிரோதிகள், பயங்கரவாதிகள், விசமிகள் என்று பேசுவது வெட்கக்கேடு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.