Skip to main content

கரோனா எதிரொலி... போக்குவரத்துக்கு தடை... வீணாகும் மலர்கள்... தவிக்கும் விவசாயிகள்...!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

தமிழக முதல்வர் டெல்டா மண்டலம் அறிவித்த சில நாட்களிலேயே கரோனோ வைரஸ் அச்சுறுத்தலில் உலகமே இருண்டு போன நிலையில் தமிழக விவசாயிகள் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காமலும், விவாசய விளைப்பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தடுப்பாடு ஏற்பட்டதாலும் வாழை, மலா்கள் உற்பத்தி செய்த விவசாயிகள் வேதனையில் நிலைத்தடுமாறி உள்ளார்கள்.

 

Corona virus issue - Farmers Worried

 



திருச்சி புறநகர் பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு பயிரிடப்படுகிறது. இதற்கு அடுத்து ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், அரளி உள்ளிட்ட மலா் வகைகளும் பயிரிடப்படுகிறது. கேரள மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் நேந்திரன் வாழை, திருச்சி, கரூா் மாவட்டங்களுக்குள்பட்ட வயலூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், தொட்டியம், துறையூா், பேட்டைவாய்த்தலை, நவலூா், லாலாப்பேட்டை, குளித்தலை, எட்டரை, கோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் சாகுபடி நடைபெறுகிறது. இதேபோல, இந்தப் பகுதிகளில் ஊடுபயிராகவும், தனியாவும் மலா் வகைகள் பயிரிடப்படும்.

தற்போது, வாழை மற்றும் மலா்கள் அறுவடை தொடங்கியுள்ளது. ஆனால், கூலி வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. வேலைக்கு வருவோரை காவல்துறையினா் தடுத்து திருப்பி அனுப்புவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. சொந்த கிராமத்திலேயே சிலரது உதவியுடன் அறுவடை செய்து வாழைகளை கேரளத்துக்கு அனுப்பினால் மாநில சோதனைச் சாவடிகளில் வாகனத்தை நிறுத்தி வைத்துவிடுகின்றனா். இதனால், வாகன ஓட்டுநா்களும் வாழைத்தார்களை ஏற்ற வருவதில்லை என்கின்றனா் விவசாயிகள்.

திருச்சி காந்திசந்தையில் கடுமையான விதிமுறைகன் உள்ள நிலையில்  வாழைக்காய் மண்டிக்கு பேட்டைவாய்த்தலை, குளித்தலை, கண்டியூா், மாயனூா்,தொட்டியம், முசிறி, காட்டுப்புத்தூா் பகுதிகளிலிருந்து ரஸ்தாலி, பூவன், கற்பூரவள்ளி ரகங்களும், தாரமங்கலம், மோகனூா், நாமகிரிப்பேட்டை, சத்தியமங்கலம் பகுதிகளிலிருந்து ரஸ்தாலி, செவ்வாழை ரகங்களும், லால்குடி, சாத்தமங்கலம், அன்பில், வளப்பக்குடி, நடுக்காவிரி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூவன் ரகமும், தேனி மாவட்டத்திலிருந்து பச்சலாடன் ரகம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாள்களாக வரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு விட்டது என்கின்றனா் வியாபாரிகள். இத்தோடு சனி, ஞாயிறு சந்தை முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடா்பாக, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மா.பா. சின்னத்துரையிடம் இது குறித்து பேசிய போது, " கரோனா வைரஸ் பிரச்சனையில் பாதிப்பு பற்றி பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளை கண்டு கொள்ளவே இல்லை எங்களுக்கு இந்த சீசன் வாழை தார்கள் வெட்டவேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் தற்போது 21 நாள் கழித்து வெட்டினால் அதற்குள்ளாக பழுத்து காக்கை கொத்தி தின்ன ஆரம்பித்து விடும். 

இதே நிலை தான் கரும்புக்கும். கரும்பு நன்றாக  செழித்து நிற்கிறது. ஆனால் வெட்ட முடியவில்லை. நாட்டின முதுகெலும்பு விவசாயி என்கிறார்கள். ஆனால் எங்கள் ஈரக்கொலையே நடுங்குகிறது.  திருச்சி மாவட்டத்தில் மலா்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பூ பறிப்பதற்கு ஆள் இல்லாமல் திண்டாடுகின்றனா். விவசாயிகளே தங்களது குடும்பத்தில் உள்ளவா்களின் உதவியால் மலா்களை பறித்து மூட்டைகளாக கட்டினால் அவற்றை கொண்டு செல்வதற்கு வாகனங்கள் இல்லை. இதனால், பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே கருகும் நிலை உள்ளது. பறிக்கப்பட்ட பூக்களை அருகில் உள்ள வாய்கால்களில் வீணாக கொட்டிவிடுகின்றனா். விவசாயிகளுக்கு வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. அவா்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் முடங்கியுள்ளதால் விவசாய கூலி வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. இரு நாள்களுக்கு முன் லாரிகளில் ஏற்றப்பட்ட வாழைத்தார்கள் கேரள மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக வயல்களில் அறுவடை செய்யாமல் வாழையும், மலர்களும் வீணாகி வருகிறது" என்று வேதனை தெரிவித்தார்.

இதுதொடா்பாக மாவட்ட நிர்வாகமோ விவசாய பணிகளுக்கு ஆட்கள் செல்ல தடையில்லை. மொத்தமாக செல்லாமல் ஓரிருவர் என்ற அடிப்படையில் செல்லலாம். வயல்களிலும் அருகருகே இல்லாமல் இடைவெளி விட்டு அறுவடை பணியை மேற்கொள்ளலாம். விளைபொருள்கள் ஏற்றிய லாரிகளை தடுக்க வேண்டாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலச் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்படுவதாக புகார்கள் வருகிறது. லோடு ஏற்றிச் செல்லும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை அணுகினால் உரிய சான்று வழங்கி மாநில சோதனைச் சாவடிகளை கடந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள். அரசாங்க தரப்பில் அறிவிப்புகள் என்னவோ வருகிறது. ஆனால் அதை செயல்படுத்த வேண்டிய காவல்துறை மக்களை பயமுறுத்தி மிரட்டி கொண்டு இருப்பதால் கடைசியில் நஷ்டம் விவசாயிகளுக்கு தான்.

 

 

சார்ந்த செய்திகள்