போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல்துறையினர் கையேடுகள், சொற்பொழிவுகள் மூலம் விழிப்புணர்வு பரப்புரை செய்து வரும் நிலையில் சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசு குட்டிக்கதைகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சேலம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அண்மையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைகள் குழு சார்பில் கருத்தரங்கு நடந்தது. அக்குழுவின் தலைவர் நீதிபதி சக்திவேல் சிறப்புரை ஆற்றினார். அதில் சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசு, ஆய்வாளர் அம்பிகா, ஜென்னீஸ் டிரஸ்ட் கர்லின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டிஎஸ்பி திருநாவுக்கரசு, குட்டிக்கதை மூலமாக போதைப்பொருளால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசினார். அவர் சொன்ன குட்டிக்கதை: ஒரு ஊரில் எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். தவளைக்கு தண்ணீரிலும், நிலத்திலும் வாழும் தன்மை உண்டு. எலியால் நிலத்தில் மட்டுமே வாழ முடியும். அவை இரண்டும் ஒருமுறை ஒன்றுடன் ஒன்று கால்களைக் கட்டிக்கொண்டு நீர்நிலை ஓரமாக விளையாடிக் கொண்டிருந்தன.
இதை வானத்தில் இருந்து ஒரு பருந்து பார்த்துவிட்டது. இன்றைக்கு நமக்கு நல்ல வேட்டை என்று கருதிய பருந்து, வேகமாக கீழே வந்து தவளையைக் கவ்வ முயன்றது. ஆனால் சுதாரித்துக்கொண்ட தவளை, திடீரென்று தண்ணீருக்குள் தாவிக் குதித்துவிட்டது. தவளையின் காலுடன் எலியும் காலும் நீளமான கயிறால் கட்டப்பட்டு இருந்ததால் எலி மட்டும் பருந்திடம் அகப்பட்டுக் கொண்டது. ஆனால் தவளையின் போதாக காலம், எலியின் காலுடன் தவளையின் காலும் பிணைக்கப்பட்டு இருந்ததால், எலியுடன் சேர்ந்து தவளையும் பருந்துக்கு இரையாகிவிட்டது.
ஆக, மதுபானங்கள் மட்டுமின்றி கஞ்சா, அபின், ஹெராயின், கொகெய்ன், போதை மாத்திரைகள் உள்ளிட்ட எந்த வகையான போதைக்கு அடிமையான ஒருவருடன் நட்பு கொண்டிருந்தால் அவரும் போதையின் பாதைக்கு இழுத்துச் செல்லப்பட்டு விடுவார்.
போதைக்கு அடிமையானவர்கள் தன்னுடன் சேர்ந்த நண்பர்களையும் கெடுத்து விடுவார்கள். அதனால்தான், 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். போதைக்கு ஒருமுறை அடிமையாகிவிட்டால் அவர்களை அதில் இருந்து மீட்பது கடினம். போதைப்பொருள் நடமாட்டம் இருப்பது குறித்து தகவல் தெரிந்தால் எங்களை 9498106528 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு டிஎஸ்பி திருநாவுக்கரசு பேசினார்.