Skip to main content

"கரோனாவைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளைச் செயல்படுத்த வேண்டும்! " -டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய-மாநில அரசுகளுக்குத் தொடர்ச்சியாகக் கடிதம் அனுப்பி வருகிறார் பாமக எம்.பி. டாக்டர் அன்புமணி. 
 

தற்போதைய சூழலில் புதிய யுக்திகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அன்புமணி, அது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 
 

''தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் படிப்படியாகக் கட்டுப்பாட்டுக்குள் வருவது நிம்மதியளித்தாலும் கூட, சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. சென்னை போன்ற மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது சிக்கலான ஒன்று தான் என்றாலும், புதுமையான உத்திகளின் மூலம் நிலைமையைச் சமாளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 

 

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 72 ஆகும். இவற்றில் சென்னையில் மட்டும் 52 தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. அதாவது நேற்று புதிதாக ஏற்பட்ட தொற்றுகளில் 72% சென்னையில் ஏற்பட்டவையாகும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 1,755 பேரில், 452 பேர் அதாவது 25.75% சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த  15- ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 10 நாட்களில் தமிழகத்தில் புதிதாகப் பரவிய நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 513 ஆகும். அவற்றில் 238 தொற்றுகள், அதாவது 46.39% சென்னையில் நிகழ்ந்தவை. 

 

anbumani ramadoss

கடந்த 10 நாட்களில் சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 275, அதாவது வெறும் 26.96% தான். அதேநேரத்தில் சென்னையில் மட்டும் கடந்த 10 நாட்களில் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் 238 பேர் ஆவர். இது அதற்கு முன் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கையான 214-ஐ விட 111.21% அதிகமாகும். அதாவது தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பரவுவதை விட சென்னையில் 4 மடங்குக்கும் கூடுதலான வேகத்தில் கரோனா வைரஸ் பரவுகிறது என்பதையும், சென்னை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதையும் இந்தப் புள்ளி விவரங்கள் மூலம் அறிய முடியும்.
 

http://onelink.to/nknapp

 

சென்னையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று வரை கரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டமாகத் திகழ்வது ஒருபுறமிருக்க, கடந்த 10 நாட்களில் கன்னியாகுமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாக கரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தில் நிலைமை இந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பது பெரிய முன்னேற்றமாகும்.
 

அதேபோல், கரூர், தூத்துக்குடி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும், தேனி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா இருவர் மட்டும் தான் கடந்த 10 நாட்களில் புதிய தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். 15 மாவட்டங்களில் ஐந்துக்கும் குறைவானவர்களும், 25 மாவட்டங்களில் 10 -க்கும் குறைவானவர்களும் மட்டுமே புதிதாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதிலிருந்தே நோய்ப்பரவல் தடுப்பில் தமிழகம் சரியான திசையில் செல்வதை அறிய முடியும். 
 

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் விகிதத்திலும் சென்னையை விட பிற மாவட்டங்கள்  முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் குணமடைந்தோர் விகிதம் 54.18 விழுக்காடாக உள்ள நிலையில், சென்னையில் இந்த விகிதம் 35.39% என்ற மிகக்குறைந்த அளவிலேயே இருக்கிறது. கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை விட, அதிக எண்ணிக்கையிலானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதும் நம்பிக்கையளிக்கும் ஒன்றாகும்.
 

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து விட்ட நிலையில், சென்னையில் நோயைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். சென்னையில் மொத்தம் 140 பகுதிகள் தீவிர நோய்ப் பாதிப்பு பகுதிகளாக அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. புதிதாக ஏற்படும் தொற்றுகள் அதிகமாக இருக்கும் போதிலும், பாதிக்கப்பட்டோரில் பலருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், புதிய தொற்றுகள் அனைத்தும் தீவிர நோய்ப் பாதிப்பு பகுதிகளுக்குள் தான் ஏற்படுகின்றன என்பது தான் சமூகப் பரவல் குறித்த அச்சத்தைப் போக்குகிறது. ஆனாலும் நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது.
 

நோய் பாதித்த பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு  இருப்பதன் மூலம் மொத்தம் 420 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகரில், நோய் பாதிப்பு உள்ள பகுதிகள் மட்டும் 2 சதுர கிலோ மீட்டராக சுருக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கரோனா அறிகுறியுடன் காணப்படுபவர்களை உடனடியாகச் சோதித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம்தான் சென்னை மாநகரத்தை கரோனா வைரஸ் நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்.
 

சென்னையில் கரோனா வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட 6 மண்டலங்களில் மட்டும் 40 லட்சம் பேர் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சோதனை செய்வது சாத்தியமில்லை; தேவையும் இல்லை. மாறாக, தீவிர நோய் பாதிப்பு பகுதிகளில் உள்ள சில லட்சக்கணக்கான மக்களைத் தனிமைப்படுத்துவது, அறிகுறி உள்ளவர்களுக்குச் சோதனை செய்வது ஆகியவை தான் இன்றைய சூழலில் சாத்தியமானது ஆகும். இந்தப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம் ஆகும்.
 

http://onelink.to/nknapp

 

தீவிர நோய்ப் பாதிப்பு பகுதிகளில் உள்ளவர்களில் வாய்ப்புள்ளோரை அவர்களின் வீடுகளிலும், மற்றவர்களைச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள கட்டிடங்களிலும் தனிமைப்படுத்த வேண்டும். நோய் அறிகுறிகள் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், அவர்களை எங்கு, எப்போது, எத்தகைய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கான செயல்திட்டத்தை வகுத்து, விரைந்து செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் சென்னையில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தப் பணிகள் முடிவடையும் வரை சென்னை மாநகர மக்கள் ஊரடங்கைத் தீவிரமாகக் கடைபிடித்து, நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் " எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
 


 

சார்ந்த செய்திகள்